சத்தமில்லாமல் பின்தொடரும் இதய பாதிப்பு :அலட்சியம் வேண்டாம் மருத்துவர்கள் எச்சரிக்கை

கோவை: அதிக சத்தத்துடன் குறட்டை விடும் பழக்கம் இருப்போருக்கு, நுரையீரல், இருதய பாதிப்பு ஏற்படலாம் என்பதால், உரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சுவாசப்பாதையில் ஏதேனும் அடைப்பு இருத்தல், மூக்கின் நடு எலும்பு விலகி இருப்பது, சதை வளர்ச்சி, கழுத்தை சுற்றி தசை அல்லது கொழுப்புகளால், சுவாச பாதையில் அழுத்தம் ஏற்படுதல் ஆகியவற்றால், சுவாசம் சீராக இல்லாமல் தடைப்படும். அப்போது குறட்டை ஏற்படும். ஆனால், இப்பாதிப்பு இருப்போருக்கு, துாக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

சுவாச பாதை சுருங்குவதால், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காதபட்சத்தில், இதயத்துக்கு அதிக அழுத்தம் ஏற்படும். மற்றவர்களை விட, குறட்டை விடும் பழக்கம் இருப்போரில், 40 சதவீத பேருக்கு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என, தெரியவந்துள்ளது.

அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர் நல்லசிவம் கூறுகையில்,'' குறட்டை பிரச்னைக்கு, மருத்துவ ரீதியான காரணங்கள் தவிர, அதிக உடல் எடை, வாழ்வியல் முறை காரணமாக உள்ளது. ஆரம்ப நிலையில், பரிசோதனை செய்தால், அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். அறுவை சிகிச்சை செய்தால், மீண்டும் குறட்டை வராது என, உத்திரவாதம் இல்லை. எளிய உணவுகள் சாப்பிடுதல், மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி, உடல் எடை அதிகரிக்காமல் பார்ப்பது ஆகிய வாழ்வியல் முறைகளும் முக்கியம். குறட்டை பிரச்னை இருப்போருக்கு ஆழ்ந்த துாக்கம் இருக்காது. இப்பிரச்னை தொடரும் போது, இதயம், நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அரசு மருத்துவமவைக்கு தினமும், 5-10 பேர் குறட்டை சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால், தொடர் மருத்துவ ஆலோசனைகளை பின்பற்ற தயங்குகின்றனர்,'' என்றார்.

குழந்தைகளுக்கான குறட்டைக்கு தீர்வு:

குழந்தைகளுக்கு மூக்கின் பின்பகுதியில் அடினாய்டு தசை இருக்கும். அடிக்கடி சளி பாதிப்பு, தொற்று கிருமிகளால் தொண்டைப்பகுதி பாதிக்கும்பட்சத்தில், அடினாய்டு தசை வீக்கமடையும். இதனால் சீராக சுவாசிக்க முடியாமல், குழந்தைகள் அவதிப்படுவர். ஆரம்ப நிலையிலே மருத்துவரை அணுகினால், தசை வீக்கத்தின் தன்மைக்கேற்ப, மருந்துகளோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ குணப்படுத்தலாம் என்றார், மருத்துவர் நல்லசிவம்.

Advertisement