காட்டுமன்னார்கோவில் தொகுதியில்  திருமாவளவன் மீண்டும் போட்டி  

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் தனி தொகுதியில் வி.சி.க., தலைவர் திருமாவளவன், 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில் சட்டசபை தனித் தொகுதி தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த தொகுதியில் வி.சி.க., கடந்த, 2006 ம் ஆண்டு தேர்தல் முதல் தொடர்ந்து நான்கு முறை போட்டியிட்டு 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2006 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., நிர்வாகி ரவிக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த, 2011 தேர்தலில் வி.சி.க., அ.தி.மு.க., அணியில் இருந்து விலகி, தி.மு.க., அணியில் சேர்ந்து, அப்போது சிட்டிங் எம்.எல்.ஏ.,வாக இருந்த ரவிக்குமார் மீண்டும் போட்டியிட்டார். ஆனால் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வியடைந்தார்.

கடந்த, 2016 தேர்தலில் வி.சி.க., தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணி இல்லாமல், மூன்றாவது அணியாக அமைக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி சார்பில் வி.சி.க., தலைவர் திருமாவளவன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணியில் காங்., பா.ம.க., வி.சி.க., என நான்கு முனைப்போட்டி ஏற்பட்டது. அதில் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் வி.சி.க சிந்தனைச்செல்வனும், அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் முருகுமாறன் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதில் சிந்தனைச்செல்வன் வெற்றிப்பெற்றார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் வி.சி.க., தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement