ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துவோருக்கு விருது
சென்னை: ஸ்ரீராம நவமி விழாவில், ராஜலட்சுமி கல்வி குழு தந்தை ராமகிருஷ்ணன் நினைவாக, ஆன்மிக சொற்பொழிவாளர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தியாக பிரம்ம கனா சபா மற்றும் ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில், ஸ்ரீராம நவமி விழா, மயிலாப்பூர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாசுவாமிகள் அரங்கத்தில், கடந்த 26ம் தேதி துவங்கியது.
இதில் ரெங்கநாத சர்மா, விவேக் மூழிக்குளம், சண்முகப்ரியா, ஹரிப்ரியா ஆகிய கர்நாடக இசை கலைஞர்களின் கச்சேரி, கடந்த மூன்று நாட்களாக நடந்தது.
இந்நிலையில், ஸ்ரீராம நவமி விழாவையொட்டி, நேற்றைய நிகழ்வில், ராஜலட்சுமி கல்வி நிறுவனத்தின் தலைவர் தங்கம் மேகநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிகழ்வில், ராஜலட்சுமி கல்வி குழுமத்தின் தந்தை ராமகிருஷ்ணன் நினைவாக, 'பிரவச்சன சுதா வாணி' விருது சொற்பொழிவாளர் வெங்கடகிருஷ்ணனுக்கும், 'பிரவச்சன யுவ வாணி' வர்ஷா புவனேஷ்வரிக்கும், ராஜலட்சுமி கல்வி நிறுவனத்தின் தலைவர் தங்கம் மேகநாதன், பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.