3வது துணை வாக்காளர் பட்டியல் மேற்கு வங்கத்தில் வௌியீடு
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ், மூன்றாவது துணை வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் நடக்கும் மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரசின் எதிர்ப்புக்கு இடையே, எஸ்.ஐ.ஆர்., பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. பிப்., 28ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது; இதில், 63 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
மேலும், 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டன. இவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, மாவட்ட நீதிபதிகள், துணை வாக்காளர் பட்டியலாக வெளியிட்டு வருகின்றனர்.
இதுவரை இரண்டு துணை பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் துணை பட்டியலில், 10 லட்சம் பெயர்களும், இரண்டாவது பட்டியலில், 21 லட்சம் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., பணியின் கீழ் மூன்றாவது துணை வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. எனினும், இதில் எத்தனை வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன, நீக்கப்பட்டன என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.