மைசூரு விமான நிலையத்தின் முதல் பெண் இயக்குனர் 25 ஆண்டு அர்ப்பணிப்பான சேவைக்கு வெகுமதி

- நமது நிருபர் -: 'மிகவும் கடினமான பணிகளில் விமான நிலைய மேற்பார்வையும் ஒன்றாகும். ஆனால், மைசூரு மண்டகள்ளி விமான நிலைய இயக்குநராக உள்ள உஷாகுமாரி, இப்பணியை திறமையாக கையாண்டு வருகிறார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் உஷாகுமாரி. விமான நிலைய பணிகளில் மிக குறைவான பெண்களே காணப்பட்ட ஒரு காலகட்டத்தில், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாட்டு துறையில், பாதுகாப்பு மேற்பார்வையாளராக தனது வாழ்க்கையை துவங்கினார்.

சென்னையில் பணி சென்னை சர்வதேச விமான நிலையம் உட்பட பல்வேறு விமான நிலையங்களில் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

சென்னையில், ஏ.ஓ.சி.சி., எனும் விமான நிலைய செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார்.

சென்னையில் 2015ல் வந்த மழை, வெள்ளம், 2018ல் கேரள வெள்ளம் போன்ற நெருக்கடியான நேரத்தில், சவாலான சூழ்நிலைகளில் விமான நிலைய செயல்பாடுகளும், பயணியர் போக்குவரத்தும் சீராக நடக்க உதவியதில், இவரின் தலைமைத்துவம் வெளிப்பட்டது.

மேலும், பேரிடர் மீட்பு பணிகளின் போது,அவர் இந்திய விமானப்படை மற்றும் கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார்.

மைசூரில் பொறுப்பேற்பதற்கு முன், அவர் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் துணை பொது மேலாளராகவும், விமான பகுதி செயல்பாடுகளின் தலைவராகவும் பணியாற்றினார்.

கால் நுாற்றாண்டு தற்போது விரிவாக்கத்துக்கு தயாராகி வரும் மைசூரு விமான நிலையத்தை வழிநடத்தும் உஷா குமாரி, விமான போக்குவரத்து துறையில் தனது பயணம் மற்றும் அத்துறையில் பெண்களின் வளர்ந்து வரும் பங்கு குறித்து கூறியதாவது:

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் விமான நிலைய செயல்பாடுகள் துறையில் எனது வாழ்க்கையை துவக்கினேன். அப்போது, இத்துறையில் மிகச்சில பெண்களே பணிபுரிந்து வந்தனர். உண்மையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முதல் பெண் பாதுகாப்பு மேற்பார்வையாளர் நான் தான்.

அன்றாட செயல்பாடுகளில் பாதுகாப்பையும், செயல் திறனையும் உறுதி செய்வதற்காக, நான் ஓடுபாதை ஆய்வுகளை மேற்கொள்ளவும், இரவில் வாகனங்களை ஓட்டவும், விமானங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் வேண்டியிருந்தது.

பல ஆண்டுகளாக பல விமான நிலையங்களில் பணியாற்றி, அவசர நிலைகளை கையாண்டுள்ளேன். பல தரப்பினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விமான நிலையம் சீராக இயங்குவதற்கான நிலையான இயக்க நடைமுறைகளை வகுக்க உதவினேன்.

ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கே உரிய சவால்கள் இருந்தன. சமீப காலமாக விமான துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு உள்ளது. நான் இத்துறையில் பணியை துவங்கியபோது, தொழில்நுட்ப பணிகளில் மிக குறைந்த அளவில் பெண்கள் இருந்தனர்.

இன்று விமான நிலைய மேலாண்மை, பொறியியல், தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகள், பிற செயல்பாட்டு துறைகளில் அதிகமாக பெண்கள் வருவதை காண்கிறேன்.

அங்கீகாரம் பெண்கள் தங்களின் திறமை, நிதானமான முடிவெடுக்கும் திறன் மற்றும் செயல்பாட்டு சிறப்பு ஆகியவற்றிற்காக அதிகளவில் அங்கீகரிக்கப்படுகின்றனர். பெண்களுக்கென பிரத்யேகமாக எந்த பயிற்சியும் இல்லை.

பயிற்சி திட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவை. ஆண்களை போன்று பெண்களும் அதே படிப்புகளையும், தொழிற் முறை பயிற்சிகளையும் பெறுகின்றனர்.

விமான போக்குவரத்து துறையில் பாலின சமத்தவம் முக்கியம். இத்துறையில் ஒரு தொழிலை உருவாக்க விரும்புபவர்கள் யாராக இருந்தாலும், இத்துறை தொடர்பான படிப்புகளுக்கு விண்ணப்பித்து, தேவையான தகுதிகளையும், அனுபவத்தையும் பெறலாம்.

தற்போது மைசூரு விமான நிலையம் விரிவாக்க காலகட்டத்தில், நான் மைசூரு விமான நிலையத்தின் முதல் பெண் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளேன். இது மைசூரு விமான நிலையத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் எனக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

இது வெறும் உள்கட்டமைப்பை உருவாக்குவது மட்டுமல்ல; இது இணைப்பை மேம்படுத்துவது, புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், விமான நிலைய செயல்பாடுகளில் உயர் தரத்தை அமைப்பது பற்றியதாகும்.

இறுதிக்கட்டம் மைசூரு ஒரு பாரம்பரிய நகரம் என்பதால், விமான நிலையத்தின் மேம்பாடு குறித்து மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

அரசின் ஆதரவுடன் பணிகள் நடந்து வரும் நிலையில், இந்திய விமான நிலைய ஆணையத்திடம், நிலத்தை ஒப்படைக்கும் செயல்முறை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

இன்று விமான துறையில் தொழில் வாழ்க்கையை தொடர நினைக்கும் இளம் பெண்களுக்கு, என் பயணம் ஒரு சிறிய உதாரணமாக அமையும் என நம்புகிறேன்.

பெரிய கனவுகளை காணுங்கள். உங்கள் இலக்குகளை உறுதியுடன் பின் தொடருங்கள்.

விமான போக்குவரத்து ஒரு சவாலான துறை. அதேவேளையில், பலனையும் அளிக்கக்கூடியது. அர்ப்பணிப்பு, தொடர்ச்சியான கற்றல் மூலம் இளம் பெண்கள் தடைகளை உடைத்து, விமான போக்குவரத்து துறைக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement