பிரபாகரன் மீது ஆணையிட்டு நாம் தமிழர் வேட்பாளர் மனு

மதுரை: நாம் தமிழர் கட்சியின் சார்பில், மதுரை தெற்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த சுமதி 'தலைவர் பிரபாகரன் மீது ஆணையாக' என்று உறுதிமொழி வாசித்தார்.

மதுரை மாநகராட்சி 4ம் மண்டல அலுவலகத்திற்கு வந்த சுமதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் படிவங்களை ஒப்படைத்தார். அலுவலர்கள் டெபாசிட் தொகை ரூ.10ஆயிரம் கேட்டனர். அப்போது தான் பணம் கொண்டு வராதது தெரிந்தது. 'சார், ஜி பே இல்லையா' என கட்சியினர் கேட்க, 'இல்லைங்க... கேஷ் ஆக கட்டணும்' என்றார் அலுவலர். ஒவ்வொருவரும் கையில், பர்ஸில் வைத்திருந்ததை எண்ணிய போது ரூ.8000 தேறியது. வெளியே சென்று அங்கிருந்த கட்சி உறுப்பினர்களிடம் ரூ.2000 வாங்கி மொத்தமாக ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகையை செலுத்தினர்.

படிவங்களை சரிபார்த்த பின் 'இறைவன் மீது ஆணையாக அல்லது உங்களுக்கு எது விருப்பமோ' அதன் பேரில் உறுதிமொழி வாசிக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறன் தெரிவித்தார். உறுதிமொழியை வாசித்த சுமதி, 'என் தலைவர் பிரபாகரன் மீது ஆணையிட்டு கூறுகிறேன்' என்றார். இவருடன் வேட்புமனுதாக்கலின் போது உடனிருந்தவர், விடுதலை புலி தலைவர் பிரபாகரன் படம் அச்சிட்ட 'டி ஷர்ட்' அணிந்திருந்தார்.

Advertisement