'விஜய்க்கு கூடுகிற கூட்டம் ஓட்டாக மாறாது': முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி

7

அ.தி.மு.க., அமைப்பு செயலரும், முன்னாள் தமிழக அமைச்சரும், குமாரபாளையம் எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலைய திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. நீங்கள், 10 ஆண்டு காலம் அமைச்சராக இருந்தும் இந்த பிரதான பிரச்னையை தீர்க்கவில்லையே?



சாயக்கழிவுநீர் பிரச்னை என்பது மிகப்பெரிய பிரச்னை. கடந்த காலத்தில் ஜெ., இருந்தபோது, ஐந்து மாவட்டங்களுக்கு நிதியை ஒதுக்கி, அதில், நாமக்கல் மாவட்டத்தையும் சேர்த்து, சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு எங்கே சென்றாலும், பொதுமக்களை துாண்டிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்போதுகூட குமாரபாளையம் அருகில், கல்லாங்காட்டுவலசு பகுதியில் இடம் வாங்கி, டில்லி வரை அந்த பைலை நான் அனுப்பி இருக்கிறேன். ஆட்சி மாற்றத்தின் காரணமாக, அதை நிறுத்திவிட்டனர்.

என்னை, பத்தாண்டு காலமாக செய்யவில்லை என்று சொன்னவர்கள், இப்போது ஆளுங்கட்சிதானே? அவர்கள் செய்திருக்கலாமே? ஏதாவது ஒன்றை துாக்கிப்போட்டு விட்டு, மக்களிடம் இருந்து தப்பிக்க பார்த்துக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு.

டாஸ்மாக் துறையின் அமைச்சராக நீங்கள் இருந்த போதே, பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக தி.மு.க.,வினர் கூறுகின்றனரே?





தி.மு.க.,வினர், 10 ரூபாய் வாங்கிக் கொண்டு திசை திருப்புகின்றனர். எங்கள் ஆட்சி காலத்தில் அப்படி ஏதாவது குற்றச்சாட்டு வந்ததா? முதல்வர், அப்படி ஏதாவது பிரச்சாரம் செய்திருக்கிறாரா? நாங்கள் கொரோனா காலத்தில், டாஸ்மாக் கடையை திறக்காததற்கே, 'திறக்கின்றனர்' என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால், அவர்கள் கொரோனா காலத்தில் கடையை திறந்துவிட்டனர். அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டை திசை திருப்புவதற்காக, எங்கள் மீது பழி போடுகின்றனர்.

நீங்கள் அமைச்சராக இருந்துவிட்டுச் சென்ற பின், மின்சார துறை அமைச்சராக பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி, மின்வாரியத்துக்கு வாங்கப்பட்ட பல லட்சம் டன் நிலக்கரியை காணோம் என்று சொன்னாரே. அதற்கு தீர்வு வரவில்லையே...

நான் சட்டசபையிலேயே சொல்லியிருக்கிறேன். நிலக்கரி, ரயிலிலும் கப்பலிலும் வருகிறது. அங்கிருந்து மின்வாரியத்திற்கு அனுப்பும்போது, எவ்வளவு டன் இருக்கிறது என்பதை எடை போட்டு தான் அனுப்புகின்றனர்.

அதேபோல் மின்வாரியத்திற்கு உள்ளே வரும்போதும், அவர்கள் எடை போட்டுதான் வாங்குகின்றனர். அதற்கு பின், லட்சக்கணக்கான டன் காணாமல் போனது என்று சொல்வது நகைச்சுவை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் நிலக்கரியை ஒரு மஞ்சள் பையிலோ, சாக்கு பையிலோ அள்ளிச்செல்ல முடியாது. அப்படி காணாமல் போனது என்று சொன்னால், எந்த லாரியில் போனது என்று கூறினால் கேட்கலாம்.

அதைவிட்டு, எதிர்க்கட்சி மீது குற்றம் சொல்ல வேண்டும் என கூறினால் எப்படி? தவறு நடந்தால் நடவடிக்கை எடுங்க. நான் சட்டப்படி சந்திக்கிறேன் என சொல்லியிருக்கிறேன்.

உங்கள் தொகுதிக்குள் தான் கிட்னி திருட்டு அதிகம் நடந்தது என்ற செய்தி உள்ளது. விசைத்தறி தொழிலாளர்களிடம் இருந்தே கிட்னி திருடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் முன்னாள் அமைச்சராகவும், தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் நீங்கள் செய்தது என்ன



?

ஜெ., இருந்தபோதும், பழனிசாமி இருந்தபோதும், விசைத்தறிகளுக்கு முழுமையாக வேலைவாய்ப்பு கிடைக்க பெற்றது. இந்த ஆட்சி வந்ததற்கு பின்னால், சரியான முறையில் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு ஆர்டர் வழங்காத காரணத்தால் வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

அதனால் சிறு தொழிலில் இருக்கும் விசைத்தறி தொழிலதிபர்கள் எல்லாம், விசைத்தறிகளை பழைய இரும்பு கடைக்கு எடை போட்டு விற்கும் நிலைமைக்கு சென்றுவிட்டனர். இவர்களுடைய ஆட்சி காலத்தில், வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால், வறுமையின் காரணமாக, அவர்களை ஏமாற்றி ஒரு சிலர் கிட்னியை பறித்துள்ளனர்.

அதுவும், எங்கள் தொகுதியை சேர்ந்த ஒரு அம்மா, அதை பேட்டியாக கொடுக்கிறார். அதற்கு காரணம் என்ன? வேலைவாய்ப்பு இல்லை. பணம் இல்லை. தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கின்றனர். அதனால், அவர்கள் ஏதோ அந்த தவறு செய்துவிட்டனர்.

அதை மருத்துவமனைகள் பயன்படுத்தி கொண்டன. பழனிசாமி அறிக்கைக்கு பின்னால், அவர்கள் நடவடிக்கை எடுத்ததாக தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். இதற்கு மூலக்காரணம் தி.மு.க., அரசு தான்.

கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமிக்கும், உங்களுக்கும் இடையிலான கடும் பனிப்போர் விளைவாக, நாமக்கல் மாவட்டத்தில் கட்சி முடக்கப்பட்டு விட்டதா?



அப்படி ஒரு பனிப்போரே கிடையாது. நாங்கள் எல்லாம் சாதாரண தொண்டர்கள். தலைவருக்கு கட்டுப்பட்டு நடக்கிறவர்கள். இதெல்லாம் தேவையில்லாதவர்கள் பத்திரிகை வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் புரளி பரப்புகின்றனர். இது எதிர்க்கட்சியினர் கிளப்பும் புரளி.

அதில் கடுகளவிற்கும் உண்மை கிடையாது. நாங்கள் எல்லாம், அ.தி.மு.க.,வில் கட்டுப்பாட்டுடன் இருக்கும் தொண்டர்கள்.

அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பில் இருந்த போது, நினைத்ததற்கெல்லாம் போராட்டம் நடத்தி மக்களை தங்கள் பக்கம் ஈர்த்த தி.மு.க.,வை போல, கடந்த ஐந்தாண்டுகளும், அ.தி.மு.க., திடமான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?



நாங்க மாவட்டம் முழுதும், தி.மு.க., அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி இருக்கிறோம். தி.மு.க.,வை விட எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். இன்னும் ஒரு மாதம் தான்.

பழனிசாமி முதல்வராகிவிடுவார். அப்போது உங்களுக்கு தெரியும் யார் சிறப்பாக பணியாற்றினர் என்று.

கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியின் மகன், பின் நின்று கட்சியை வழிநடத்துவது போல, உங்கள் மகனும் உங்கள் அரசியல் செயல்பாடுகளுக்கு முழு பின்னணியாக இருப்பதாக சொல்கின்றனர். இதுவும் வாரிசு அரசியல் தானே?



முதல் கேள்வியே தவறானது. பழனிசாமி பின்னால் அவரது மகன் இருக்கிறார் என்று சொல்வதே தவறு. அதேபோல், என் மகன், என்னோடு தேர்தல் பணியாற்றுகிறாரே தவிர, கட்சி பதவி கிடையாது. நான் போகமுடியாத இடத்திற்கு அவர் செல்கிறார், அவ்வளவு தான்.

நான் தேர்தலில் நிற்கும் காரணத்தால், அவர் தேர்தல் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் கிடையாது.

தமிழகத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. மதுபான ஆலைகளை மூடும் அளவுக்கான முடிவை, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் எடுக்குமா?



அது கொள்கை முடிவு. அது குறித்தெல்லாம் நான் தன்னிச்சையாக எதுவும் சொல்ல முடியாது.

அ.தி.மு.க.,வை பலமாக எதிர்த்து வந்த அ.ம.மு.க., தற்போது அ.தி.மு.க., பக்கம் வந்ததில், யாருக்கு பலம்?





நிச்சயமாக எங்களுக்குத்தான் பலம். கடந்த தேர்தலில் ஒரு சில தொகுதிகளில், அவர்கள் அதிக ஓட்டுகள் வாங்கியதால், வெற்றி வாய்ப்பு பறிபோய்விட்டது. இப்போது எங்களோடு வந்துவிட்டனர். நாங்கள் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

தோற்கும் தொகுதிகளாக பார்த்து, த.மா.கா.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் கொடுத்ததாக சொல்கின்றனரே...

நிச்சயமாக எனக்கு தெரியாது. தொகுதி பங்கீட்டு குழுவில் நான் இல்லை. அவர்கள் சம்மதித்து இருப்பர். அதைத்தான் கொடுத்திருப்பர். இதை ஊகத்தில் சொல்கிறேன்.

விஜய் தன் பலத்தை நிரூபித்த பின், தேர்தலுக்கு பிறகான கூட்டணியில் அவரை இணைத்துக் கொள்வீர்களா?





எதுவாக இருந்தாலும், யாரை கூட்டணியில் சேர்க்க வேண்டும்; சேர்க்கக்கூடாது என்பது பொதுச்செயலர் எடுக்கும் முடிவு. சேர்த்துக் கொள்ளுங்க என்றும் சொல்ல மாட்டேன்; சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்றும் சொல்ல மாட்டேன். அவர்கள் இந்த தேர்தலில் புதுமுகம்.

நடிகரை பார்க்க வேண்டும் என்பதற்காக ஜனங்கள் ஓடுகின்றனர். ஓட்டு எந்தளவிற்கு சேர்கிறது என்று தேர்தல் முடிந்து பார்த்துக் கொள்ளலாம்.

தேர்தலில், விஜய் எத்தனை சதவீத ஓட்டுகளை பெறுவார்?





எங்கள் கணிப்பு, அவர் குறைந்த அளவில் தான் ஓட்டுகளை பெறுவார் என்பது தான். அவரை பார்க்க கூடுகிற கூட்டம், ஓட்டு போடுகிற கூட்டம் அல்ல.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், நடிகர் செந்தில், 2006 உள்ளாட்சி தேர்தலின் போது, மாலை 7:00- - 8:00 மணி அளவில் தான் பிரச்சாரத்திற்கு வருவார் என்று சொன்னார்கள். சொன்னவுடன், ஒரு ஆட்டோவில் விளம்பரம் செய்தோம். கிட்டத்தட்ட, 10,000 பேர் வந்து விட்டனர்.

அதனால், நடிகர் என்றால் பார்ப்பதற்கு மக்கள் வரத்தான் செய்வர். ஆனால், அத்தனையும் ஓட்டுகளாக மாறாது. மீண்டும் சொல்கிறேன், கூடுகிற கூட்டம் ஒருபோதும் ஓட்டாக மாறாது.

Advertisement