கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு
கோவை: கோவை மாநகராட்சியில், கழிவுநீர் உந்து நிலையத்தில், மோட்டார் மாற்றிக்கொண்டிருந்த இருவர், தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
அக்குடும்பத்தினருக்கு தலா, 30 லட்சம் ரூபாய் இழப்பீடை மாநகராட்சி வழங்கியது.
கோவை, சாயிபாபா காலனியில், மாநகராட்சி கழிவுநீர் உந்து நிலையம் உள்ளது. கழிவுநீர் சேகரமாகும், 40 அடி ஆழமுள்ள தொட்டியில், 60 ஹெச்.பி., திறனுள்ள மோட்டார் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடந்தது.
பராமரிப்பு பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் நியமித்த பிளம்பர் அர்ஜுன் குமார், எலக்ட்ரீசியன் சுரேஷ் குமார் ஆகியோர், வால்வை பொருத்தி, மோட்டாரை கிரேன் மூலம் தொட்டிக்குள் இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிரேனில் இருந்து அர்ஜுன் குமார் திரும்ப முயன்றபோது, கால் இடறி, தொட்டிக்குள் விழுந்தார். கழிவுநீரில் தத்தளித்த அவரை, சுரேஷ்குமார் மீட்க முயற்சித்தார். அவரும் தொட்டிக்குள் விழுந்தார்.
மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து, மூன்று குழாய்கள் வழியாக கழிவு நீர் தொடர்ந்து வந்தது.
இருவரும் தண்ணீருக்குள் மூழ்கி, மூச்சுத்திணறி உயிரிழந்தனர். கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தால், கழிவுநீர் வெளியேற்றப்பட்டது.
தீயணைப்பு துறையினர் போராடி, நேற்று அதிகாலை உடல்களை மீட்டனர். அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுதொடர்பாக சாயிபாபா காலனி போலீசார், வழக்கு பதிந்து, பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, பணியாளர்களை கழிவுநீர் தொட்டிக்குள் பணி செய்ய அனுமதித்த ஒப்பந்ததாரர் பிரபாகரனை கைது செய்தனர்.
மாநகராட்சியில் இருந்து, இருவரின் குடும்பத்துக்கும் தலா, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு நேற்று வழங்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இத்தொகை ஒப்பந்ததாரரிடம் வசூலிக்கப்படும்.
''பாதுகாப்பு முன்னேற்பாடு செய்யாமல், தொட்டிக்குள் யாரும் இறங்கக் கூடாது. கழிவுநீர் வருவதை முற்றிலும் நிறுத்தியிருக்க வேண்டும்.
''என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரிக்க, தலைமை பொறியாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன். துணை கமிஷனர் தலைமையில், கமிட்டி அமைக்கப்படும். வேட்புமனு பெறும் நடைமுறை முடிந்ததும், கமிட்டி விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.
மேலும்
-
தொகுதி மறுவரையறை ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2720 அதிகரிப்பு
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு