பியூட்டி பார்லர் உரிமையாளருக்கு அடி, உதை : முன்னாள் பெண் ஊழியரின் கணவர் மீது வழக்கு

ஆவலஹள்ளி: பியூட்டி பார்லருக்குள் புகுந்து அதன் உரிமையாளரையும் , அவரது மனைவியையும் தாக்கிய, முன்னாள் பெண் ஊழியரின் கணவர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

பெங்களூரு ஆவலஹள்ளியை சேர்ந்தவர் மோகன் குமார், 35. பியூட்டி பார்லர் நடத்துகிறார். இந்த பியூட்டி பார்லரில் சுஷ்மா, 30, என்பவர் அழகு கலை நிபுணராக வேலை செய்தார். அவருக்கு திருமணமாகி விட்டது. ஆனாலும், சுஷ்மா மீது ஏற்பட்ட ஈர்ப்பால், மோகன் குமார் ஒரு தலையாக காதலித்து உள்ளார்.

சில தினங்களுக்கு முன், தன் காதலை சுஷ்மாவிடம் வெளிப்படுத்தினார். அவர் ஏற்க மறுத்தார். இதனால், அவரை வேலையில் இருந்து மோகன் குமார் நீக்கி விட்டார். இதுபற்றி தன் கணவரிடம் சுஷ்மா கூறினார். நேற்று முன்தினம் இரவு பியூட்டி பார்லருக்கு சென்ற சுஷ்மாவின் கணவர் உட்பட 5 பேர், மோகன் குமாரை பிடித்து சரமாரியாக தாக்கினர். தடுக்க முயன்ற அவரது மனைவி ஸ்ரீஜாவையும் தாக்கி விட்டு தப்பினர்.

இந்த தாக்குதலில் மோகன் குமாருக்கு முகத்திலும், ஸ்ரீஜாவுக்கும் கழுத்து பகுதியிலும் காயம் ஏற்பட்டது. அவர்கள் அளித்த புகாரில், 5 பேர் மீது வழக்கு பதிவானது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீஸ் தேடுகிறது.

தாக்குதல் காட்சிகள் பியூட்டி பார்லரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றன.

Advertisement