மயிலாப்பூரில் 34 கோவில்களில் கும்பாபிஷேகம் செய்துள்ளேன் :தி.மு.க.,வேட்பாளர் வேலு பெருமிதம்

சென்னை:“மயிலாப்பூர் தொகுதியில், 34 கோவில்களில் கும்பாபிஷேகம் செய்துள்ளேன்,” என, தி.மு.க.,வேட்பாளர் வேலு ஓட்டு சேகரிப்பின் போது வாக்காளர்களிடையே தெரிவித்தார்.

மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட, 124வது வட்டத்தில், தி.மு.க.,வேட்பாளர் வேலு, கூட்டணி கட்சியினருடன், நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக, திரவுபதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின் வெளியே வந்த அவருக்கு கட்சியினரும், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் பூர்ண கும்ப மரியாதையுடன், மாலை அணிவித்தும் வேல் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட வேலு, வாக்காளர்களிடம் பேசியதாவது:

கடந்த 2021ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி அமைத்த நாளிலிருந்து, 2026ம் ஆண்டுக்குள், மயிலாப்பூர் தொகுதியில் மட்டும், 34 கோவில்களில் கும்பாபிஷேகம் செய்துள்ளேன்.

மழைக்காலத்தில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படாத வகையில், 44.72 கி.மீ மழைநீர் வடிகால்வாய் அமைத்து கொடுத்துள்ளேன். இளைஞர்களுக்கென, 16 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் கட்டி தரப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, ஏழு புதிய நியாய விலை கடைகள், மூன்று ஆதரவற்றோர் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட திட்டங்கள் மயிலாப்பூர் தொகுதி மக்களுக்கென செய்து கொடுத்துள்ளேன்.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில், தனக்கு வாக்களித்த மக்களை மறக்காமல், அன்றாடம் அவர்களுடன் நின்று, பல திட்டங்களை செய்து கொடுத்துள்ளேன்.

இதன் காரணமாக, தற்போது ஓட்டு சேகரிப்புக்காக செல்லும் இடங்களில் எல்லாம், பொதுமக்கள் தனக்கு மிகுந்த வரவேற்பு கொடுக்கின்றனர்.

எனவே, எதிர்க்கட்சிகளும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும், எந்த வாக்குறுதி அளித்தாலும், மயிலாப்பூர் தொகுதி மக்களிடையே எடுபடாது. நிச்சயம் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தான் தமிழகத்தில் அமையும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement