ரயில்முன் பாய்ந்த பெண்ணை காப்பாற்ற முயன்றவரும் பலி

மறைமலை நகர்: ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணும், காப்பாற்ற முயன்றவரும் விரைவு ரயில் மோதி பலியாயினர்.

மறைமலை நகர் ரயில் நிலையத்தில், நேற்று காலை 10:20 மணிக்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 2வது நடைமேடையில் உள்ள தண்டவாளத்தில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது திருச்செந்துாரில் இருந்து எழும்பூர் நோக்கி விரைவு ரயில் வந்தது. இதை பார்த்த பயணி ஒருவர், அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றார்.

ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், பெண்ணை காப்பாற்ற முயன்றவர் மறைமலை நகர் அடுத்த ஆப்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன், 53, என்பது தெரியவந்தது.

உடைந்த நிலையில் மீட்கப்பட்ட மொபைல் போனை வைத்து, தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் விபரம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement