தேர்தல் விதிமீறல் புகார்கள் மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை :சி - விஜில் ஆப்பில் தெரிவிக்க அறிவுரை
காஞ்சிபுரம்:''காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி - விஜில் மொபைல் ஆப்பில் புகார் தெரிவித்தால், 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் பணிகளை கண்காணிக்க, கலெக்டர் அலுவலகத்தில், ஒரு தாசில்தார் தலைமையில், 5 உதவியாளர்களுடன், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.
பொதுமக்கள் அளிக்கும் தேர்தல் புகார்கள் மூன்று வகையாக தொலைபேசி, வாட்ஸாப் மற்றும் சி - விஜில் ஆப், மூலமாக பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் தொடர்பான புகார்கள் சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து புகைப்படம், வீடியோ மற்றும் குரல் பதிவு ஆகியவற்றுடன் சி - விஜில் ஆப் மூலம் தெரிவிக்கப்பட்டால், 100 நிமிடங்களுக்குள் தேர்தல் பறக்கும் படைகள் மூலம் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நான்கு தொகுதிகளிலும் தனித்தனியே 9 பறக்கும் படைக்குழுக்கள், 9 கண்காணிப்பு நிலை குழுக்கள் தொகுதி வாரியாக 24 மணி நேரமும் மொத்தம் 72 குழுக்கள் தேர்தல் பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் தங்களது தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் சி - விஜில் மொபைல் ஆப் மூலம் விதிமீறல்கள் எந்த இடத்தில் நிகழ்கிறதோ அவ்விடத்திலிருந்தே புகார்கள் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கும் புகார்களை 100 நிமிடங்களில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கலெக்டர் அலுவலக கண்காணிப்பு அறையை 1800 425 7087, 044- 2723 8025, -2723 8026, -2723 8027, -2723 8028, -2723 8029 என்ற எண்களிலும், 81487 37532 என்ற வாட்ஸாப் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.