காஞ்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் புதிய புறநோயாளி அட்டை வழங்கல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில், அனைத்து மருத்துவ பயனாளிகளும், பழைய புறநோயாளி சீட்டுகளுக்கு மாற்றாக ‛எச்.எம்.ஐ.எஸ். 3.0' எனப்படும் புதிய புறநோயாளி அட்டையை மாற்றி கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பொது, மகப்பேறு, குழந்தை, கண், பல், தோல், என, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும், 3,000க்கும் மேற்பட்டோர் பல்வேறு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் புறநோயாளிகளுக்கு ஓ.பி., சீட்டு எனப்படும் புறநோயாளி அனுமதி சீட்டு காகித தாளில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, புதிதாக ‛ எச்.எம்.ஐ.எஸ்., 3.0' என்ற புதிய புறநோயாளி அட்டை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், புதிதாக, எச்.எம்.ஐ.எஸ்., 3.0 என்ற புதிய புறநோயாளி அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டை மூலம் நோயாளிகளுக்கு ஆதார் அடிப்படையிலான தனி எண். பெயர், மொபைல் எண், க்யூ ஆர் கோடு விபரங்கள் அடங்கிய சுகாதார அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டை மூலம் புறநோயாளிகளும் சிகிச்சை பெறலாம்.
உள்நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் அனைத்து விபரங்களும் எச்.எம்.ஐ.எஸ். 3.0 செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இனி வரும் காலங்களில் நோயாளிகளுக்கான மருந்துகள், பரிசோதனை முடிவுகள் அனைத்தையும் மருத்துவர்கள், பணியாளர்கள் ஆன்லைனின் அனுப்பி பெற்று கொள்ள முடியும்.
இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மற்ற அரசு மருத்துவமனைக்கு சென்றாலும், மாநிலத்தில் வேறு எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சுகாதார அடையாள அட்டை எண்ணை வைத்து நோயாளிகள் அனைத்து விபரங்களை பார்த்து எளிதில் சிகிச்சை அளிக்க முடியும்.
இந்த புதிய அட்டையை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். எப்போது அரசு மருத்துவமனைக்கு வந்தாலும் புதிய அட்டையை கொண்டு வர வேண்டும். புதிய புறநோயாளி அட்டையை வாங்கிய அனைவருக்கும் ரத்த அழுத்தம், உயரம், உடல் எடை ஆகியவற்றை பரிசோதனை செய்த பிறகே மருத்துவரை அணுக வேண்டும்.
ஒவ்வொரு வருகையின்போதும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை எடுத்து வர வேண்டும்..
எனவே, அனைத்து மருத்துவ பயனாளிகளும், பழைய புறநோயாளி சீட்டுகளுக்கு பதிலாக புதிய புறநோயாளி அட்டை மாற்றி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஓசூர், ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் திடீர் மாற்றம்
-
என்னுடன் நடை போட்டிக்கு தயாரா? பழனிசாமிக்கு துரைமுருகன் சவால்
-
தர்மம் வெல்ல பா.ஜ.,வுக்கு ஓட்டு
-
செந்தில் பாலாஜிக்கு மாற்றாக தம்பி அசோக்குமார் வேட்பு மனு
-
எப்போதும் 'கேட்ச்'ஐ விடும் பா.ஜ.,
-
நாடு முழுதும் 'நீட்' தேர்வுக்கு 26 லட்சம் பேர் விண்ணப்பம்