இனிதே நிறைவுற்றது திண்டுக்கல் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து நடத்திய பிளஸ் 2வுக்கு பின் உயர்கல்வியை தேர்வு செய்யும் வகையில் மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று இனிதே நிறைவுற்றது.

திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே. மகாலில் நடந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர் பங்கேற்று பயனடைந்தனர். கல்வி அரங்குகளில் குவிந்து உயர்கல்வி குறித்த பல்வேறு தகவல்களை ஒரே இடத்தில் பெற்றனர். நிறைவு நாள் நிகழ்ச்சியில் நிபுணர்கள் பேசியதாவது:

* ஆடிட்டர்களுக்கு அதிக மவுசு

'வணிகப் படிப்புகள்' குறித்து மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) வணிகவியல் துறை உதவி பேராசிரியர் செல்வராஜ் பேசியதாவது:

வணிகவியலிலும் அதிக எண்ணிக்கையில் 'புரபெஷனல்' கோர்ஸ் உள்ளது. இத்துறை படிப்புகள் அனைத்தும் உடன் வேலை வாய்ப்புகள் தருபவை. பி.காம்., பேங்கிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், அக்கவுண்டிங் அண்ட் பைனான்ஸ், பி.பி.ஏ., உள்ளிட்ட படிப்புகளும், சி.ஏ., சி.எஸ். சி.எம்.ஏ., உள்ளிட்ட புரபெஷனல் படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. சி.ஏ., படிப்பு கடினமானது என பொதுவான கருத்து உள்ளது. அதில் உண்மையில்லை. நான்கு மாதங்கள் முறையாக படித்தால் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பவுண்டேஷன் நிலை தேர்தல் வெற்றி பெறலாம். ஆர்வம், கடின உழைப்பு இருந்தால் பட்டப் படிப்பு முடித்து நேரடியாக இன்டர்மீடியேட், அதையடுத்து பைனல் தேர்வுகளில் வெற்றி பெற்று சாதிக்கலாம். ஏ.சி.சி.ஏ., படித்தால் உலகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி உட்பட சில கல்லுாரிகள் ஏ.சி.சி.ஏ.,யுடன் ஒருங்கிணைந்த பாடத் திட்டங்களை கொண்டுள்ளன. அதுபோன்ற கல்லுாரிகளை தேர்வு செய்யலாம். சி.ஏ.,வுடன் ஏ.சி.சி.ஏ., படித்து எம்.என்.சி., கம்பெனிகளுக்கும் ஆடிட்டர்களாக பணியாற்றலாம். உலக அளவில் இந்திய ஆடிட்டர்களுக்கு அதிக தேவை உள்ளது. சுயதொழில் துவங்க வேண்டும் என்றால் வணிகவியல்சார் படிப்புகளை தேர்வு செய்யலாம். அரசு நிறுவனங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், நிதி ஆலோசகர், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

* கலை அறிவியல் படிப்புகள்

ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் சந்தானகிருஷ்ணன் பேசியதாவது:

பிளஸ் 2 வுக்கு பின் என்ன படிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்வதில் மாணவர், பெற்றோருக்கு இடையே பெரிய போராட்டம் இருக்கும். அதேநேரம் இன்றைய மாணவர்கள் அலைபேசி, யுடியூப், இன்ஸ்டா உள்ளிட்டவற்றில் மூழ்கி நேரத்தை வீணடிக்கின்றனர். பல கவனச் சிதறல்களுக்கு ஆளாகின்றனர். இதை முதலில் தவிர்க்க வேண்டும். பெற்றோர் மாணவர்களை கண்காணிக்க வேண்டும். இன்று ஒவ்வொரு படிப்புக்கும் 'ஸ்பெஷலைஸ்டு கோர்ஸ்கள்' வந்துவிட்டன. படிக்கும் போதே தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்போது தான் வேலைவாய்ப்பு சாத்தியம். இல்லையென்றால் டிகிரி முடித்துவிட்டு குறைந்த சம்பளத்தில் தான் ஏதாவது ஒரு வேலை செய்யும் நிலை ஏற்படும். படிப்பை வாழ்க்கைக்காக படிக்க வேண்டும். தொழில்நுட்பத் திறன், சாப்ட் ஸ்கில்ஸ், மேலாண்மை திறன், ஆராய்ச்சி திறன், சமூக தொடர்பு திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். என்.ஐ.ஆர்.எப்., நாக் அங்கீகாரம், பிஎச்.டி., தகுதியுள்ள ஆசிரியர்கள் உள்ளனரா போன்ற தகுதியை பார்த்து கல்லுாரியை தேர்வு செய்ய வேண்டும். இன்றைய மாணவர்களுக்கு சமநிலை சிந்தனை மிக அவசியம். எந்த படிப்பை தேர்வு செய்தாலும் படிக்கும் போதே அதுதொடர்பான சர்ட்டிபிகேட் கோர்ஸ்களையும் சேர்த்து படியுங்கள்.

* கொட்டிக்கிடக்குதுவேலைவாய்ப்புகள்

காந்தி கிராம கிராமிய பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் பேசியதாவது:

அனைத்து படிப்புகளுக்குமே நல்ல எதிர்காலம் உண்டு. முன்பு பி.காம்., என்ற படிப்பு மட்டும் இருந்தது. தற்போது 20க்கும் மேற்பட்ட பி.காம்., படிப்புகள் வந்து விட்டன. எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அதற்காக தொடர்ந்து உழைக்க வேண்டும். ஆர்வம், அதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் பிரச்னைகளுக்கு உடன் தீர்வுகாணும் திறமை, புதிய சிந்தனை மிக அவசியம்.

கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றால் அதற்கான திறனை அவர் வளர்த்துக்கொண்டார். தொடர்ந்து வளர்த்தும் வருகிறார். உலகளவில் வேலை இல்லை என்ற நிலையே இல்லை. ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதற்கேற்ற திறமையை தான் பலர் வளர்த்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு தான் வேலை இல்லை என்ற நிலை ஏற்படும். புதிய சிந்தனை இருந்தால் 'ஸ்டார்ட்அப்' தொழில் துவங்கி சிறந்த தொழில்முனைவோராக ஆகலாம். பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கலாம்.

* வேலை வாய்ப்பு படிப்புகள்

கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா:

எந்த படிப்பில் ஆர்வம் உள்ளது என்பதை விட எந்த படிப்பை படிக்க முடியும் என்பதை மனதில் வைத்து பாடப் பிரிவை தேர்வு செய்ய வேண்டும். பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம் என்பதை பெற்றோர், மாணவர் இணைந்து தேர்வு செய்ய வேண்டும். நீட் தேர்வு இல்லாத கண் மருத்துவப் படிப்பு, நர்சிங், உட்பட 30க்கும் மேற்பட்ட இணை மருத்துவப் படிப்புகளை தேர்வு செய்யலாம். இதுதவிர மீன் வளர்ப்பு, வேளாண், வனத்துறை படிப்புகள் உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்யலாம். பொறியியல் படிப்புகளுக்கு ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

பிளஸ் 2வில் 190 க்கு மேல் 'கட்ஆப்' மதிப்பெண் இருந்தால் அண்ணா பல்கலை, அரசு பொறியியல் கல்லுாரிகளில் விரும்பிய பிரிவுகளை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். 'கட்ஆப்' குறையும் போது உதவிபெறும், தனியார் பொறியியல் கல்லுாரிகளில் கிடைக்கும். ஆர்க்கிடெக்சர் படிப்புகளுக்கு 'நாட்டா', சட்டப் படிப்புக்கு 'கிளாட்' நுழைவு தேர்வு எழுத வேண்டும். ஓவியம் வரைவது, கிரியேட்டிவ் சிந்தனை திறன் உள்ளோர் பி.எப்.ஏ., என்ற பைன் ஆர்ட்ஸ் படிப்பை தேர்வு செய்யலாம். பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., மீடியா, விளம்பரம், அனிமேஷன், எலக்ட்ரானிக்ஸ் மீடியா சார் படிப்புகளை தேர்வு செய்யலாம்.

இந்நிகழ்ச்சிக்கு பவர்டு பை: கோவை ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யாபீடம். இணைந்து வழங்குபவர்கள்: மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,), சேலம் நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி. ஆடியோ பார்ட்னர் இன்போ பஸ்.

* வாட்ச், டேப்லெட், லேப்டாப் பரிசு

கருத்தரங்கில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடை எழுதிய திண்டுக்கல் சூரியபிரதாப், ஆதித்யா, பூஜா, வர்ஷினி, ஒட்டன்சத்திரம் சாய்ஹசினி ஸ்மார்ட் வாட்ச், திண்டுக்கல் சுரேந்தர் டேப்லெட், திண்டுக்கல் மோனிகா லேப்டாப் பரிசு வென்றனர்.

Advertisement