மக்களை திசைதிருப்பவே மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் :பா.ஜ., மீது காங்கிரஸ் பாய்ச்சல்

புதுடில்லி:'முக்கிய பிரச்னைகளில் இருந்து நாட்டு மக்களை திசை திருப்பவே, மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை மோடி அரசு கையிலெடுத்துள்ளது' என, காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.

பார்லி., மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, 2023 செப்டம்பரில் மத்திய அரசு சட்டம் இயற்றியது. எனினும், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை முடிந்த பின் இது அமலுக்கு வரும்.

தற்போதைய சூழலில், 2027ல் தான் மக்கள் தொகை முடிவடையும். இதனால், 2029 லோக்சபா தேர்தலுக்குள் இட ஒதுக்கீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட முடிவெடுத்த மத்திய அரசு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்தது. இதற்காக அந்த சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வரவுள்ளது.

இதன்படி, லோக்சபா இடங்களின் எண்ணிக்கை, 543ல் இருந்து 816 ஆக அதிகரிக்கப்படும். மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர, பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வரும் 16ல் நடக்கிறது.

இந்த விவகாரம் குறித்து, காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறி, பிரதமர் மோடி ஏமாற்றி வருகிறார். இப்படி ஏமாற்றுவதில் அவர் நிபுணத்துவம் பெற்றவர். உதாரணமாக, லோக்சபாவில் உத்தர பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான வித்தியாசம், தற்போது 60 ஆக உள்ளது. தொகுதி மறுவரையறையால், இது 90 ஆக உயரும். இது போல், பல உதாரணங்கள் உள்ளன.

தொகுதி மறுவரையறை பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு மட்டுமே பயனளிக்கும். இதனால் தென் மாநிலங்கள் மட்டுமல்ல, பஞ்சாப், ஹரியானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களும் பாதிக்கப்படும்.

நாடு தற்போது, கடுமையான பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கை சார்ந்த நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், பிரதமர் மோடி எதைப்பற்றியும் கவலைப்படாமல் உள்ளார். பொது விவாதங்கள் இல்லாமல் தொகுதி மறுவரையறையை முன்னெடுத்து செல்வதில் அவர் குறியாக இருக்கிறார். இது மக்களை திசை திரும் முயற்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

@quote@ பாதகமாக அமையும்! பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர், டில்லி ஆகியவற்றின் மொத்த லோக்சபா எண்ணிக்கை, 40 ஆக உள்ளது. அதே சமயம் உ.பி., மட்டும், 80 தொகுதிகளை கொண்டுள்ளது. தொகுதி மறுவரையறைக்கு பின், இந்த இடைவெளி இன்னும் அதிகரிக்கும். இந்த முன்மொழிவு, கூட்டாட்சி சமநிலையை சீர்குலைத்து, ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு பாதகமாகவே அமையும். மணீஷ் திவாரி, லோக்சபா எம்.பி., - காங்.,quote

Advertisement