தேசமே முதன்மை என்ற கொள்கையுடன் தொடர்ந்து உழைப்போம்; பிரதமர் மோடி

4

புதுடில்லி: 'வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பாஜ தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறது. நம் நாட்டை முன்னேற்றம் மற்றும் செழிப்பின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம்,' என்று பாஜ நிறுவன நாளில் தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது எக்ஸ் தளப்பதிவு; நாடு முழுவதும் உள்ள பாஜ தொண்டர்கள் அனைவருக்கும் கட்சி நிறுவன நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாய்நாட்டுக்கு பிறகு தான் அனைத்தும் என்ற கொள்கையின் அடிப்படையில் சமூகப் பணிகளை நமது கட்சி மேற்கொண்டு வருகிறது. சுயநலமில்லாத சேவை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் நல்லாட்சியின் மீதான ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்கள் தான் நமது கட்சி தொண்டர்கள்.

கட்சியின் சித்தாந்தம் மற்றும் பணிகளுடன் மக்களை இணைப்பதற்காக, கட்சி தொண்டர்கள் அடிமட்ட அளவில் அயராது உழைத்துள்ளனர். பல வருடங்களாக கட்சியின் வளர்ச்சியை மேம்படுத்திய எண்ணற்ற தொண்டர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் விடாமுயற்சியையும் நாம் நினைவுகூர்ந்து பாராட்டுவோம்.

மக்களின் நலனை தனது தொலைநோக்குப் பார்வையின் மையமாகக் கொண்ட ஒரு கட்சியாக பாஜக திகழ்கிறது. இது மத்தியில் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பாஜ தலைமையிலான ஆட்சி மேற்கொண்டு வரும் பணி மூலம் பிரதிபலிக்கிறது. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பாஜ தொடர்ந்து உறுதியுடன் உள்ளது. இந்த ஒருங்கிணைந்த உறுதிப்பாடு நம்மை மேலும் வழிநடத்தும். நம் நாட்டை முன்னேற்றம் மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லட்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பாஜ அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது. இன்று 46வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் உள்ள பாஜவினர் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement