'கவர்னர் வேலைக்கு தான் பழனிசாமி செல்ல வேண்டும்'
நொளம்பூர்: ' 'அ.தி.மு.க.,வை பா.ஜ., இல்லாமல் செய்யப் போகிறது. பழனிசாமி அடுத்து கவர்னர் வேலைக்கு தான் செல்ல வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.
சென்னை, மதுரவாயல் தொகுதி தி.மு.க., வேட்பாளர் காரம்பாக்கம் கணபதியை ஆதரித்து எம்.பி., கனிமொழி நேற்று நொளம்பூரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
டில்லியில் இருந்து, நம்மை எதிர்ப்பதற்காகவே பா.ஜ.,வினர் தமிழகம் வருகின்றனர். இது நன்கு தெரிந்தும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அவர்களோடு கைகோர்த்துள்ளார்.
வழக்கு போட்டு, தன்னை கைது செய்வர் என்ற பயத்திலேயே, பா.ஜ.,வோடு சேர்ந்துள்ளார். பா.ஜ., ஒரு நடைமுறையை பின்பற்றுகிறது. எதிர்க்கட்சியினர் மீது வழக்கு போட்டு அவர்களை மிரட்டுவர். அவர்களோடு கூட்டணி சேர்ந்து விட்டால், அவர்களை சுத்தமானவர்களாக காட்ட முயல்வர். இதற்காகவே பெரிய வாசிங் மெஷின் வைத்துள்ளனர்.
பழனிசாமி, இலவசமாக ப்ரிஜ் கொடுப்பேன் என, அறிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்தால் தானே இதையெல்லாம் செய்ய முடியும்? அ.தி.மு.க.,வை அழிக்கும் வேலையை பா.ஜ., செய்யப் போகிறது.
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மகளிர் உரிமை தொகை 2,000 ரூபாய் கொடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். கட்டாயம், அது நடக்கும். பழனிசாமி, இனி கவர்னர் வேலைக்குத் தான் செல்ல வேண்டும்.
கடந்த 2016ல் அ.தி.மு.க., ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் இலவச மொபைல் போன் கொடுப்பதாக கூறி இருந்தனர். ஆனால், அதை செய்யவில்லை.
இவ்வாறு கனிமொழி பேசினார்.