தி.மு.க.,வினரை நம்பாத செந்தில்பாலாஜி கோவையில் கரூர் ஆட்களை இறக்குகிறார் அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

கோவை: “கோவை தெற்கு தொகுதியில், செந்தில் பாலாஜியை தி.மு.க.,வினரே தோற்கடிப்பர்,” என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி:

முதல்வர் ஸ்டாலின், நிறைய பொய் பேசுகிறார். அந்நிய நன்கொடை சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். அனைத்து பிரிவினருமே, வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறுகின்றனர். ஆனால், சிறுபான்மையினருக்கு எதிராக நன்கொடை சட்டம் கொண்டு வந்ததாக பெய் பேசி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 42 கேந்திரிய வித்யாலயாவில் 40 பள்ளிகளில் தமிழ் படிக்க முடியும். தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு சில ஊடகத்தில் தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைக்கும் எதிரானது. இது பற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூரில் ஒரே பகுதியை சேர்ந்த 18 பேரை, இந்த தொகுதியில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்ய வைத்துள்ளார். அடியாட்களை, வேட்பாளர்கள் போர்வையில் இறக்கி உள்ளார்.

கரூரை சேர்ந்த 18 சுயேச்சைகள் போட்டியிடுவதை கோவையில் உள்ள எந்த மானமுள்ள தி.மு.க., வினரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். செந்தில் பாலாஜியை தி.மு.க.வினரே தோற்கடிப்பர். கோவையில் செந்தில் பாலாஜிக்கும், கரூரிலும் மாற்று வேட்பாளராக. அமலாக்க துறையால் தேடப்படும், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும்.

எனது பெயரில் போலியான கடிதம் ஊடகத்தில் உலா வருகிறது. இவற்றை சரிபார்த்த பின் வெளியிட வேண்டும். போலி செய்திகள் வருவதால் களத்தில் இருந்து பணியாற்றி வருகிறேன். என் பணியை சரியாக செய்து வருகிறேன். நானே முன் நின்று ஒரு தொண்டனாக கேரளா மற்றும் தமிழகத்தில் வேலை செய்து வருகிறேன். கடைசி இரண்டு வாரத்தில் தேர்தல் நிலை மாறலாம். இரு முனை போட்டியாக களம் மாறும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement