மதுரையில் ரூ.5 ஆயிரம் கோடியில் திட்டங்கள்; தி.மு.க., வேட்பாளர் தளபதி பிரசாரம்

மதுரை: மதுரை வளர்ச்சிக்காக தி.மு.க.,வின் 5 ஆண்டுகள் ஆட்சியில் ரூ.5 ஆயிரம் கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் தளபதி பிரசாரம் செய்தார்.

மதுரை நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயில், மருதுபாண்டியர் மெயின்ரோடு, சிங்கராயர் காலனி, கருமாரியம்மன் கோயில், கட்டபொம்மன் நகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த தளபதி பேசியதாவது:

மதுரை வளர்ச்சிக்கு 5 ஆண்டுகள் தி.மு.க., ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் கோடியிலான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக வடக்கு தொகுதிக்கு மேலமடை பாலம் மக்களின் கனவு பாலமாக அமைந்துள்ளது. கோரிப்பாளையம் மேம்பாலத்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது. தவிர ரூ.240 கோடியில் கலைஞர் நுாற்றாண்டு நினைவு நுாலகம், ரூ.80 கோடியில் பந்தல்குடி கால்வாய் சீரமைப்பு, பிரமாண்டமாக அமைந்துள்ள வண்டியூர் பூங்கா என பல திட்டங்கள் தி.மு.க., அரசில் நடந்துள்ளன. இதுபோன்ற திட்டங்கள் மதுரைக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும். ஸ்டாலின் முதல்வராக வேண்டும். இவ்வாறு பேசினார்.

பகுதி செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பொன்சேது, வட்ட செயலாளர் ஆபித், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement