கரூர் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் 'தில்' காட்டும் அ.தி.மு.க., வேட்பாளர்

கோவை: ''கரூர் தி.மு.க.,வினரின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்; எங்களுக்கு எந்த பயமும் இல்லை,'' என கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜூனன், தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசனிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 2016, 2021ல் போட்டியிட்டு வென்ற இவருக்கு, அவரது மகன் கோபாலகிருஷ்ணன் தேர்தல் பணிகளில் பக்கபலமாக இருந்தார். உடல் நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்தார். சென்டிமென்ட்டாக அவரது மகனும், பேரனுமான, 3 வயதான சேயோன் கோபாலை அழைத்து வந்திருந்தார். டெபாசிட் தொகையை பேரனின் கையில் கொடுத்து, அதன்பின், தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தார். ஆண்டவன் பெயரால் உறுதிமொழி ஏற்றார். மாற்று வேட்பாளராக, மனைவி விஜயலட்சுமி மனு தாக்கல் செய்தார்.

அதன்பின், அம்மன் அர்ஜூனன் நிருபர்களிடம் கூறியதாவது:

நம்ம தான் ஜெயிப்போம்; நாம மட்டும்தான் ஜெயிப்போம் என கூறுகின்றனர். ஓட்டுப்பெட்டியையும் கரூரில் செஞ்சு கொண்டு வந்து விட்டார்களா. தி.மு.க., வேட்பாளரே கரூரை சேர்ந்தவர். தி.மு.க.,வில் நிற்பதற்கு வேட்பாளர்கள் கூட இங்கில்லையா. சுயேட்சையாக போட்டியிட கூட 18 பேரை கரூரில் இருந்து வரவழைத்திருக்கின்றனர். எதற்கு இத்தனை பேரை அழைத்து வருகிறீர்கள். கலகம் ஏற்படுத்தவா. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுப்போம்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால், கோவையை பழையபடி தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று சொல்லும் அளவுக்கு மாற்றுவோம். தொழில் வளர்ச்சியை கொண்டு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் வந்தால், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மக்களுக்கு வேலை கொடுத்து விட்டால், அண்டா, குண்டாவை எதிர்பார்க்க மாட்டார்கள்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement