தி.மு.க., துண்டு போட மறுத்த சிறுவனுடன் வேட்பாளர் வாதம்

15

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில், தி.மு.க., சார்பில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., பிரபாகரராஜா போட்டியிடுகிறார். பிரசாரத்தின்போது, தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களுக்கு, தி.மு.க., துண்டு அணிவித்தார். ஒரு சிறுவன், துண்டை அணிய மறுத்து, 'நான் த.வெ.க.,' என்றார். அதிர்ச்சி அடைந்த பிரபாகரராஜா, அச்சிறுவனை விவாதத்துக்கு அழைத்தார்.

'நான் வெற்றி பெற்றால், நீ தி.மு.க., துண்டை அணிய வேண்டும்; உங்கள் கட்சி வென்றால், நான் த.வெ.க., துண்டை அணிவேன்' என தெரிவித்தார். அச்சிறுவனும், 'ஓகே' என சவாலை ஏற்றான்.

'தற்போது, உங்களுக்கு பத்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் பொதுத்தேர்வு நடத்துவேன் என்கின்றனர். ஹிந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்கின்றனர். நாங்கள், இருமொழிகள் போதும்; விரும்பினால் மூன்றாவது மொழி படிக்கலாம் என்கிறோம்.

'மூன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைத்தால் என்னாகும், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வர். இதுபோன்ற சட்டங்களை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். ஆனால், உங்கள் த.வெ.க., தலைவர் வாய்மூடி இருந்தார். அப்போ, ஸ்டாலின் நல்லவரா; விஜய் நல்லவரா' என, அந்த சிறுவனிடம் வேட்பாளர் கேட்டார்.

சிறுவனோ, 'ஸ்டாலின் தான்' என்றார். 'அப்போ யாருக்கு ஓட்டு போட வேண்டும்' என்றபோது, 'ஸ்டாலினுக்கு தான்' என்றான் சிறுவன். உடனே, அந்த சிறுவனின் கழுத்தில் தி.மு.க., துண்டை அணிவித்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.

தி.மு.க., வேட்பாளரின் சவாலை தைரியமாக ஏற்ற சிறுவனை, த.வெ.க.,வினர் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், 'களத்தில் பணியாற்றி, கொள்கைகளை கொண்டு சேர்ப்பதில் தி.மு.க.,வே சிறந்தது' என, அக்கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement