காங்கேயத்தில் 2வது முறை வெற்றி பெறுவது நிச்சயம்; அமைச்சர் சாமிநாதன் நம்பிக்கை



காங்கேயம், காங்கேயம் தொகுதியில் தி.மு.க., சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் சாமிநாதன், காங்கேயத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார். அவருடன் மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், காங்., கட்சி வழக்கறிஞர் மணி உடனிருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கடந்த, 2021 தேர்தலில் காங்கேயம் பகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட நேரத்தில், தொகுதி மக்கள் மகத்தான வெற்றியை தந்தார்கள். கொரோனா நோயிலிருந்து மக்களை காப்பாற்றியதோடு, ஐந்தாண்டு காலமாக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, மற்ற மாநிலங்களை காட்டிலும் முன்னணியில் உள்ளது. மகளிருக்கான, 8,000 ரூபாய்க்கான கூப்பன் திட்ட வாக்குறுதி, மிகச்சிறந்த ஒன்றாகும். இந்த கூப்பனை பயன்படுத்தி, மின்சார அடுப்பு வாங்கலாம். மத்திய அரசின் தவறான கொள்கையால் காஸ் சிலிண்டர் கட்டுப்பாடு வந்துள்ளது. அதனால்தான் எதிர்காலத்தில் மின்சார அடுப்பு பயன்படும் என்ற கருத்தில் அதை சொல்லி கொண்டிருக்கிறோம். அனைவருக்குமான ஆட்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயமாக மீண்டும் மலரும். தமிழக மக்களும் தர தயாராக உள்ளார்கள். நான், 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
காங்கேயம் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை யாரும் வெற்றி பெற்றதில்லை என்று ஒரு கருத்து உள்ளது. அந்த கருத்து இந்த முறை பொய்யாகும். இரண்டாவது முறையாக தொகுதியில் வெற்றி பெற போகிறேன். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தெருநாய் கடிகளால் பலியான ஆடுகளுக்கு, உரிய நிவாரணம் தரும் என்று ஏற்கனவே அறிவித்து, முதல்வரும் உத்தரவிட்டுள்ளார். நிதித்துறையில் இறுதிக்கட்டத்தில் உள்ளது. முத்துார்-காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தில், 2011 முதல் 2021 வரை அ.தி.மு.க., அரசு சரியாக செய்யவில்லை. மின் மோட்டார் வாங்கியதில் முறைகேடு நடந்து, இரண்டு பொறியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த திட்டத்தில் மின் மோட்டார் வாங்குவதற்கும், முத்துாரிலிருந்து வாலிபனங்காடு வழியாக பைப்லைன் மாற்றப்பட்டு குழாய் மாற்றப்பட்டது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement