முதல்வரின் துாக்கத்தை கெடுத்த இடைத்தேர்தல் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கிண்டல்

தாவணகெரே: முதல்வர் சித்தராமையாவின் துாக்கத்தை இடைத்தேர்தல் கெடுத்து உள்ளதாக, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கிண்டலாக கூறியுள்ளார்.

தாவணகெரேயில் நேற்று அவர் அளித்த பேட்டி:

முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் அரசும், இதுவரை கும்ப கர்ணன் துாக்கத்தில் இருந்தனர். இடைத்தேர்தல் வந்ததால் முதல்வரும், அமைச்சர்களும் சுறுசுறுப்பாகி உள்ளனர். தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில், இரவில் கூட முதல்வர் சரியாக துாங்குவது இல்லை. அவரது துாக்கத்தை இடைத்தேர்தல் கெடுத்துள்ளது.

வளர்ச்சி பணி செய்யாமல், வாக்குறுதி திட்டங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றனர். தங்கள் தோல்வியை மூடிமறைக்க, மத்திய அரசு மீது பழி சுமத்துகின்றனர்.

அனுபவம் வாய்ந்த சித்தராமையா முதல்வராக இருந்தும், மாநிலத்தை அவரால் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. அஹிந்தா சமூகத்தின் பெயரை பயன்படுத்தி முதல்வர் பதவிக்கு வந்த அவர், அந்த சமூகத்தையே மறந்தே விட்டார்.

தாவணகெரே தெற்கில் சீனிவாஸ் தாஸ் கரியப்பா வெற்றிக்காக, பா.ஜ., தொண்டர்கள் அதிகம் உழைக்கின்றனர். காங்கிரஸ் பணபலம் இங்கு எடுபடாது. முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை காங்கிரஸ் மீது முஸ்லிம்கள் கடும் கோபத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் சமர்த்தின் அப்பா அமைச்சர், அம்மா எம்.பி.,யாக உள்ளார். அப்படியும் அவர்களுக்கு பதவி ஆசை விடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று மாலை சீனிவாஸ் தாஸ் கரியப்பாவை ஆதரித்து நகரின் முக்கிய வீதிகளில், விஜயேந்திரா, மத்திய உணவு மற்றும் பொது வினியோக அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தனர்.

Advertisement