9 தொகுதிகளில் மனு தாக்கல் செய்தோர்... 260 பேர் மாவட்டத்தில் இறுதி நாளில் பரபரப்பு
கடலுார், கடலுார் மாவட்டத்தி்ல் உள்ள 9 தொகுதிகளில் மொத்தம் 260 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடலுார் தொகுதிக்கு கடலுார், விருத்தாசலம் தொகுதிகள் ஆர்.டி.ஓ., அலுவலகத்திலும், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சி்ப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகள் அந்தந்த தாசில்தார் அலுவலகத்திலும், சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்திலும், மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
மனு தாக்கல் கடந்த மாதம் 30ம் தேதி துவங்கியது. இடையிடையே மார்ச் 31ம் தேதி மற்றும் ஏப்.,1, 3, மற்றும் 5 ஆகிய 4 நாட்கள் அரசு விடுமுறையாகும். எனவே வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்றுடன் கடைசி நாளாகும்.
கடந்த 30ம் தேதி மற்றும் 2, 4, 6 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மனு தாக்கல் செய்தனர். அதில் 4 நாட்கள் சேர்த்து கடலுார் தொகுதியில் 33 மனுக்கள், திட்டக்குடி 39, விருத்தாசலம் 41, நெய்வேலி 32, பண்ருட்டி 17, குறிஞ்சிப்பாடி 19, புவனகிரி 25, சிதம்பரம் 29, காட்டுமன்னார்கோவில் 25 உட்பட மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் மொத்தம் 260 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 165 மனுக்களை ஆண் வேட்பாளர்களும், 95 மனுக்கள் பெண் வேட்பாளர்களும் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், இறுதி நாளான நேற்று மட்டும் கடலுார் 18, திட்டக்குடி 26, விருத்தாசலம் 21, நெய்வேலி 22, பண்ருட்டி 8, குறிஞ்சிப்பாடி 14, புவனகிரி 19, சிதம்பரம் 16, காட்டுமன்னார்கோவில் 19 உட்பட 163 மனுக்கள் தாக்கலானது. இவற்றில் அதிகபட்சமாக திட்டக்குடி தொகுதியில் 39 மனுக்களும், குறைந்தபட்சமாக பண்ருட்டி தொகுதியில் 17 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்சியினரும் தமது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர். காலை முதல் மதியம் 3:௦௦ மணி வரை மனு தாக்கல் செய்யும் இடத்தில் கூட்டம் நிறைந்திருந்தது.
மனு இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. 9ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
மனு தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று, அனைத்து கட்சியினரும் மனுதாக்கல் செய்ய ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.