லஷ்கர் பயங்கரவாதிகள் 5 பேரை கைது செய்தது காஷ்மீர் போலீஸ்

ஸ்ரீநகர்:பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதிகள் ஐந்து பேரை காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். இதில், 16 ஆண்டாக நம் நாட்டில் தங்கியிருந்து காஷ்மீருக்கு வெளியே முகாம் அமைத்து பயங்கரவாத செயலில் ஈடுபட்ட அப்துல்லா என்ற பயங்கரவாதியும் பிடிபட்டார்.

ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த போலீசார், மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் சேர்ந்து கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியானா உட்பட 19 இடங்களில் கடந்த சில நாட்களாக நடந்த இந்த தேடுதல் வேட்டையின்போது நான்கு ஏ.கே., ரக துப்பாக்கி உட்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து நடந்த விசாரணையில் லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு நிதி மற்றும் தளவாடங்களை சப்ளை செய்த ஒரு பெரிய கும்பல் செயல்படுவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பாகிஸ்தான் பயங்கரவாதி அப்துல்லா என்பவரும் அடக்கம்.

இது குறித்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பிடிபட்ட ஐந்து பயங்கரவாதிகளில் முகமது நகீப் பாத், அடில் ரஷீத் பாட், குலாம் முகமது மிர் ஆகிய மூவர் ஸ்ரீநகரை சேர்ந்தவர்கள். இவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், உணவு மற்றும் ஆயுதங்கள் வழங்கி உதவி உள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதிகள் அப்துல்லா மற்றும் உஸ்மான் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீருக்குள் ஊடுருவினர். பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர்கள், 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும், 'ஏ பிளஸ்' வகையை சேர்ந்த பயங்கரவாதிகள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.







Advertisement