மின் உற்பத்தி நிலையங்களை பாதுகாக்க மனித சங்கிலி அமைக்க வேண்டும்: நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு அழைப்பு
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து ஈரானுக்கு அமெரிக்க அதிபர் வழங்கியுள்ள காலக்கெடு நெருங்கிய நிலையில், மின் உற்பத்தி நிலையங்களை பாதுகாக்க மனித சங்கிலி அமைக்க தன் நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மேற்காசியா நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, 39 நாட்களாக போர் நடத்தி வருகின்றன. தன் எல்லையை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடியுள்ளது.
போரை நிறுத்த மற்றும் ஜலசந்தியை திறக்க, ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெடு விதித்துள்ளார். கெடு முடிந்தவுடன், ஈரானின் மின் உற்பத்தி மையங்கள், பாலங்களை தாக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த கெடு முடிய உள்ள நிலையில், ஈரானில் பதற்றம் நிலவி வருகிறது-. இதைத் தொடர்ந்து, தங்கள் நாட்டு மின் உற்பத்தி மையங்களை பாதுகாக்க மனித சங்கிலிகளை உருவாக்குமாறு ஈரான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஈரானிய இளைஞர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கான உயர் கவுன்சில், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை புஷெர் அணுமின் நிலையம் மற்றும் பிற பிராந்திய மின் நிலையங்களை சூழ்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.
தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தவும், தாக்குதல்களை தடுப்பதற்காகவும் ஈரான் எடுத்துள்ள இந்த மனித கேடய முயற்சி பலனளிக்குமா என்பது கேள்விகுறியாக உள்ளது. மேலும், கோடிக்கணக்கான தன்னார்வலர்கள் இருப்பதாகக் கூறினாலும், பல ஈரானியர்கள் தற்போதைய தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே, இந்த மனித சங்கிலியில் எத்தனை பொதுமக்கள் உண்மையாகவே தங்களை போர்களத்தில் ஈடுபடுத்தி கொள்வார்கள் என்பது கேள்விக்குறியே.
@block_B@ உயிரை தியாகம் செய்ய தயார்! ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான டிரம்பின் காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான், தன் எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது: நாட்டின் பாதுகாப்பிற்காக. 1.4 கோடிக்கும் அதிகமான பெருமைமிக்க ஈரானியர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்ய தன்னார்வலர்களாக வந்துள்ளனர். நானும் என் உயிரை தியாகம் செய்ய தயாராக இருந்தேன், இருக்கிறேன், எப்போதும் இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஈரானின் மொத்த மக்கள் தொகை 9.3 கோடியாகும். கடந்த சில நாட்களாகவே ஈரான் அரசு குறுஞ்செய்திகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களை தன்னார்வலர்களாக இணைய வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், ஈரான் அதிபர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் குறித்து தெரிவித்திருப்பது, அரசின் கோரிக்கையை ஏற்று மக்கள் இணைந்துள்ளதையே காட்டுகிறது. தன்னார்வலர்களாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மட்டுமின்றி 12 வயது சிறுவர்களும் இக்குழுவில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு ஒருபுறம் நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தினாலும், மறுபுறம் பொதுமக்களை போரில் ஈடுபடுத்துவது சர்வதேச அளவில் 'போர் குற்றம்' ஆகும்.block_B
@block_B@ ரயில் பயணம் வேண்டாம்! டிரம்பின் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், 'ஈரானியர்கள் இன்று ரயிலில் பயணம் செய்ய வேண்டாம்' என்று இஸ்ரேல் ஒரு வினோதமான அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது: உங்கள் பாதுகாப்புக்காக இந்த நிமிடம் முதல் ரயில்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ரயில்களிலோ அல்லது தண்டவாளங்களுக்கு அருகிலோ இருப்பது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷ்ஹத் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை மின் உற்பத்தி மையங்கள் மற்றும் பாலங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது, ரயில்வே நெட்வொர்க்கை அழிப்போம் என இஸ்ரேல் மறைமுகமாக எச்சரித்துள்ளது.block_B
@block_B@ தாக்குதலில் 18 பேர் பலி ஈரானின் அல்போர்ஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களில், இரு குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த 24 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அல்போர்ஸ் மாகாணம் மட்டுமின்றி, அந்நாட்டு தலைநகர் டெஹ்ரான், கோர்ரமாபாத் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஷிராஸில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் ஆலை ஆகியவையும் தாக்குதலுக்குள்ளாகின. இத்தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், இது மனிதாபிமானமற்ற செயல் என தெரிவித்துள்ளது.block_B
@block_B@ சவுதி மீது ஏவுகணை தாக்குதல் ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அல் ஜுபைல் தொழிற்பேட்டையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. 1,000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்பேட்டை உலகின் மிகப்பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றாகும். சவுதி அரேபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதத்துக்கும் மேல் இத்தொழிற்பேட்டை பங்களிக்கிறது. இத்தொழிற்பேட்டையை நோக்கி ஈரானில் இருந்து 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதை, சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இடை மறித்து அழித்தன. இருப்பினும், அந்த ஏவுகணைகளின் பாகங்கள் மற்றும் ட்ரோன்கள் அல் ஜுபைல் தொழிற்பேட்டையில் உள்ள சவுதியை தளமாகக் கொண்டு இயங்கி வரும் உலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான வேதிப்பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான 'சவுதி பேசிக் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன்' மீது விழுந்தது. இதனால் அந்த ஆலையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.block_B
மேலும்
-
மாவட்டத்தில் 218 மனுக்களில்... 160 ஏற்பு! 7 தொகுதிகளில் 43 தள்ளுபடி
-
நெடுஞ்சாலை குப்பைகளில் தீ ;வாகன ஓட்டிகள் கடும் அவதி
-
பதற்றம் நிறைந்த ஓட்டுச்சாவடிகள் :சப் கலெக்டருடன் எஸ்.பி., ஆலோசனை
-
பொறியியல் கல்லுாரி விளையாட்டு விழா
-
வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை
-
அ.தி.மு.க., வேட்பாளருடன் பா.ம.க., மகளிரணி பிரசாரம்