குறிஞ்சிப்பாடி தொகுதியில் 5 முனை போட்டி

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி தொகுதியில், 5 முனை போட்டி உறுதியாகி உள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிட பல்வேறு கட்சிகள் மற்றும், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம், 19 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அமைச்சர் பன்னீர்செல்வம் தி.மு.க., சார்பில், 7வது முறையாக தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, பொது தேர்தல் அலுவலர் ப்ரீத்தி ஜெயின் முன்னிலையில் நடந்தது.

குறிஞ்சிப்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள், தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்தனர்.

பிரதான கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனையில் ஏற்கப்பட்டன. இதையடுத்து குறிஞ்சிப்பாடி தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க.,, த.வெ.க., த.வா.க., என, 5 பிரதான கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

இதனால் தொகுதியில் இம்முறை, 5 முனை போட்டி நடைபெற உள்ளது. நாளையுடன் வேட்புமனுக்கள் திரும்ப பெறும் அவகாசம் நிறைவடைய உள்ளது. இதில் பிரதான கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் வாபஸ் பெறப்பட்டால், 5 முனை போட்டி எனும் நிலை மாற வாய்ப்புள்ளது.

Advertisement