முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட ஓட்டு சாவடிகளில் தன்னார்வலர்கள் நியமனம்

புதுச்சேரி: ஓட்டு சாவடிகளில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு உதவிட 1,736 தன்னார்வலர்களை மாவட்ட தேர்தல் அதிகாரி நியமித்துள்ளார்.

மாவட்ட தேர்தல் துறை மற்றும் ஸ்வீப்பும் இணைந்து நுாறு சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 845 ஓட்டுச் சாவடிகளிலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு உதவிடவும், வாக்காளர்கள் கொண்டு வரும் மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், ஒரு ஓட்டுச் சாவடிக்கு இரு மாணவ - மாணவியர், தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஒவ்வொரு தொகுதிக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரி கூறும், முடியாத வாக்காளர்களை அழைத்து வந்து ஓட்டு பதிவிற்கு உதவி செய்திட தனியாக இரண்டு தன்னார்வலர்கள் என, புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த 1,736 மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாணவ - மாணவியர், தன்னார்வலர்கள் நியமனத்தினை, மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் குலோத்துங்கன் துவக்கி வைத்து, அவர்கள் பணிக்கு உண்டான டி ஷர்ட், தொப்பி, ஸ்டிக்கர் உள்ளிட்ட தொகுப்பினை வழங்கினார்.

அப்போது, அவர், 'தேர்தல் நாளன்று காலை முதலில் உங்களுடைய வாக்கினை பதிவு செய்து விட்டு, பின்னர் பணி ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு சென்று அவர்களுக்கு ஒதுக்கப்படும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.

Advertisement