குடிநீரில் கழிவுநீர் கலப்பு: வேளச்சேரி மக்கள் தவிப்பு
வேளச்சேரி: வேளச்சேரியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு குழாய்களில், கழிவுநீர் கலந்த குடிநீர் வருவதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், இரு வாரங்களாக இந்நிலையே இருப்பதாக, பகுதிமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அடையாறு மண்டலம், 175வது வார்டு, வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக பள்ளம் தோண்டியபோது, மின் கேபிள், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை முறையாக சரி செய்யாமல் அலட்சியமாக விட்டதால், குடிநீரில் கழிவுநீர் கலந்துவிட்டது.
இதனால், இரு வாரமாக கழிவுநீர் கலந்த குடிநீரே, அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக, பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த சாய்குமார், 42, என்பவர் கூறியதாவது:
மழைநீர் வடிகால்வாய் பணி மற்றும் சில வீடுகளில் வாசலில் புதிய போர்வெல் போடுவதால், பல தெருக்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
அதை சரி செய்யாததால், குடிநீரில் கழிவுநீர் கலந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், லாரி குடிநீர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
குழாய் பதித்துள்ள இடத்தில், போர்வெல் அமைக்கக்கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். சிலர், அனுமதி இல்லாமல் போர்வெல் அமைப்பதுடன், குழாயையும் சேதப்படுத்துகின்றனர். வடிகால்வாய் பணியாலும் குழாய் சேதமடைகிறது. குழாய்களை சீரமைத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
நிலவின் மறுபக்கத்தில் மறைந்த வீரர்கள் புதிய மைல்கல்லை எட்டிய ஆர்டெமிஸ் - 2 :திகிலான 40 நிமிடம்
-
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதான கட்டடத்தை பராமரிக்க மாட்டீங்களா:ரூ. பல கோடியில் உருவானது வீணாகலாமா
-
இக்னோ பட்டமளிப்பு விழா
-
பாதாளச் சாக்கடை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு: மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பாலாஜி உறுதி
-
தேர்தல்களம் பகுதிக்காக ரெட்டியார்சத்திரத்தில் தேர்தல் விதி அமலில் அலட்சியம்
-
இறைச்சி கடையில் ரூ.18 லட்சம் திருட்டு