பாதாளச் சாக்கடை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு: மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பாலாஜி உறுதி
மதுரை: 'தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைத்து மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் பாதாளச் சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்' என மதுரை மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆர்.பாலாஜி உறுதியளித்தார்.
இத்தொகுதிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகர், மீனாம்பிகை நகர், முத்துப்பட்டி, அழகப்பன் நகர், பைகாரா உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ஒட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். பாலாஜிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், திலகமிட்டும் வரவேற்றனர்.
பிரசாரத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவார். இதுவரை செயல்படுத்தாத திட்டங்களை செயல்படுத்துவார். பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியாக தொடர்ந்து இருக்கும். மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட விடுபட்ட திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும்.
ஜெய்ஹிந்துபுரத்தில் பாதாளச் சாக்கடைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய இணைப்பு வழங்கி சோலையழகுபுரம் பம்பிங் ஸ்டேஷனுக்கு கொண்டுசெல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதிக்குள் 90 சதவீதம் புதிய ரோடு பணி முடிந்துள்ளன. விடுபட்ட புதிய ரோடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அவை 3 மாதங்களில் அமைத்துத்தரப்படும். இவ்வாறு பேசினார்.
பகுதி செயலாளர்கள் பழனிசாமி, சசிதேவா, கவுன்சிலர்கள் லட்சிகாஸ்ரீ, தமிழ்ச்செல்வி, பொதுக் குழு உறுப்பினர் முருகானந்தம், வட்டச் செயலாளர்கள் பாலாஜி, கண்ணன், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.