அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச 'நீட்' தேர்வு பயிற்சி

திருவள்ளூர்:அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்விற்கான, உண்டு உறைவிட இலவச பயிற்சி வகுப்பினை, கலெக்டர் பிரதாப் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.

திருவள்ளுர் மாவட்டம், பட்டாபிராம் அண்ணாநகர் பகுதியில், அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில், 50 அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்விற்கான உண்டு உறைவிட, இலவச பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பை துவக்கி வைத்த கலெக்டர் பிரதாப், மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான புத்தகத் தொகுப்புகளை நேற்று முன்தினம் வழங்கினார்.

பின், கலெக்டர் பிரதாப் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி மாணவர்களின், மருத்துவக் கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், 'நீட்' தேர்விற்கான சிறப்பு உண்டு உறைவிட பயிற்சி வகுப்பு, 6ம் தேதி துவங்கி, மே 1ம் தேதி வரை நடக்கிறது. இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட 50 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தனியார் பயிற்சி நிறுவனம் மூலம், 'நீட்' பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பராவ், மாவட்ட கல்வி அலுவலர் லிங்கேஷ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement