பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி
அன்னுார்: ''பாண்டியாறு பவானி நதி இணைப்பு மூன்று ஆண்டுகளில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய இணை அமைச்சரும், அவிநாசி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான எல். முருகன் தெரிவித்தார்.
அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்ட கூட்டமைப்பு சார்பில், கோவை மாவட்டம், அன்னுார் அருகே கதவுகரையில் கலந்துரையாடல் நேற்று நடந்தது.
அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளிங்கிரி பேசுகையில், ''பவானி ஆற்றில்ஆண்டுக்கு நான்கு மாதங்கள் நீர் வரத்து இல்லை. தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளா சென்று கடலில் வீணாக கலக்கும் பாண்டியாறை பவானி நதியில் இணைத்து பில்லுார் அணையில் சேமிக்க வேண்டும். இதன் வாயிலாக பவானி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் செல்லும்,'' என்றார்.
அவிநாசி தொகுதி பா.ஜ., வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் பேசியதாவது :
கொங்கு மண்டல மக்களின், 60 ஆண்டு கால கனவான அத்திக்கடவு திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில், 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டது. அடுத்த மாதம் தமிழக முதல்வராக பழனிசாமி பதவி ஏற்றபின், விடுபட்ட குளம், குட்டைகளுக்கான அத்திக்கடவு இரண்டாவது திட்டம் நிறைவேற்றப்படும்.
பவானி நதியில் நீர் வரத்து அதிகரிக்க, கேரளாவுக்கு சென்று வீணாக கடலில் கலக்கும் பாண்டியாறை பவானி நதியுடன் இணைக்கும்திட்டம் குறித்து ஆய்வு செய்து மூன்று ஆண்டுகளுக்குள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பா.ஜ., ஆட்சியில், 11 கோடி விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6,000 ரூபாய் கவுரவ நிதி வழங்கப்படுகிறது. மத்திய அரசு சார்பில் நடமாடும் கால்நடை மருந்தகம் 600 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்பட்டது. 1962 என்னும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் கால்நடைக்கு சிகிச்சை அளிக்கும் ஆம்புலன்ஸ் அந்தப் பகுதிக்கு நேரில் வந்து சிகிச்சை அளிக்கும்.
இவ்வாறு பேசினார்.
கலந்துரையாடலில் அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் நடராஜன், கணேசன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
மகள் மேட்டூரில்; மனைவி கிருஷ்ணகிரியில்: தேர்தல் களத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பன் வாரிசுகள்
-
நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் 2 திட்டப்பயணம் நிறைவு; பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்; இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்
-
கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர்
-
'கரூர்' மாடலுக்கே திரும்புகிறாரா விஜய்; காலை 9:00 மணி முதலே காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
நீலகிரி எம்.பி., ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை கருத்து