பா.ஜ., மேலிடம் அவசர அழைப்பு; தனி விமானத்தில் அண்ணாமலை திடீர் டில்லி பயணம்

46

சென்னை: பா.ஜ., மேலிடத்தில் இருந்து வந்த அவசர அழைப்பை அடுத்து, அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நேற்றிரவு சென்னையில் இருந்து, தனி விமானத்தில் டில்லி புறப்பட்டு சென்றார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, அண்ணாமலை நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவரை உடனடியாக டில்லி புறப்பட்டு வரும்படி, கட்சி மேலிடம் அழைத்தது. அதை தொடர்ந்து, அண்ணாமலை நேற்று மாலை,புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டரில், சென்னை விமான நிலையம் வந்தார்.

பின், தனி விமானத்தில், இரவு, 7:20 மணிக்கு டில்லி புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே, அண்ணாமலை டில்லி சென்றதாகவும், அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, காரைக்காலில் பிரசாரத்திற்கு அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரை, நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Advertisement