தே.ஜ., கூட்டணி சதி முயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: திருமாவளவன் ஆவேசம்

1

திண்டுக்கல்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் திண்டுக்கல்லில் நேற்று அளித்த பேட்டி:

மதுரையில் பிரசாரம் செய்த மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், 'மெட்ரோ ரயில் வேண்டும் என்றால் பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டும்' என்கிறார். தேர்தல் களத்தில் கூட உருட்டல், மிரட்டல், 'பிளாக்மெயில்' அணுகுமுறையை பா.ஜ.,வினர் கையாள்கின்றனர்.

வட மாநிலங்களில் ஜாதி, மதத்தால் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதை போல், தமிழகத்திலும் கைவரிசை காட்டும் அவர்களின் சதி முயற்சி இங்கே வெற்றி பெறாது.

அ.தி.மு.க., -- பா.ஜ., - -அ.ம.மு.க., -- பா.ம.க., இணைந்திருப்பது பொருந்தா கூட்டணி; கொள்கை அடிப்படையில் முரண்பட்டவர்கள், தேர்தல் ஆதாயத்திற்காக இணைந்துள்ளனர். அந்த விரக்தியில் தி.மு.க., கூட்டணி மீது தனிநபர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கும் அதிகாரம், தேர்தல் கமிஷனுக்கு மட்டுமே உண்டு. ஆனால், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பதற்கு, தி.மு.க.,வே காரணம் என திசை திருப்புகின்றனர். த.வெ.க.,வினரால் மக்களை ஏமாற்ற முடியாது.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement