சொந்த கட்டடமின்றி பள்ளி மாணவியர்.. தவிப்பு! . இடத்தை கல்வி துறைக்கு மாற்ற இழுபறி
திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் அரசு மகளிர் உயர்நிலை பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, பள்ளிக்கல்வித் துறைக்கு மாற்றாமல் இருப்பதால் சொந்த கட்டட வசதி இல்லாமல் மாணவியர் அவதிப்படுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில், அரசு தொடக்கப்பள்ளி, மகளிர் உயர்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகின்றன. இந்த மூன்று பள்ளிகளில், 2,000க்கும் மேற்பட்ட மாணவ --- மாணவியர் படிக்கின்றனர்.
இதில், அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி, இருபாலர் படிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்போது வரை இயங்கி வருகிறது.
மகளிர் பள்ளிக்கு சொந்தமான இடம், வகுப்பறை கட்டடம் ஏற்படுத்த வேண்டும் என பெற்றோர், மாணவியர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. எனவே, பள்ளி மாணவியர் நலன் கருதி, கடந்த 2012ம் ஆண்டு, கேளம்பாக்கம் ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, புல எண்: 11/1 மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், 2 ஏக்கர் இடம் பள்ளி கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்டது.
அங்கு, கடந்த 2015- - 2016 ம் நிதி ஆண்டில் சிறப்பு கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் முகப்பு வளைவு அமைக்கப்பட்டது.
ஆனால், மகளிர் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பள்ளி கல்வித்துறைக்கு நில மாற்றம் செய்யாமல் வருவாய் துறை இழுத்தடித்து வருகிறது.
அடுத்தக்கட்ட பணியாக வகுப்பறை போன்ற கட்டடங்கள் கட்டும் பணியும் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால், இருபாலர் படிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மகளிர் உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு, அங்கு இடப்பற்றாக்குறையால், மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஊராட்சி தலைவர் ராணி, துணை தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் சென்னை, எழிலகத்தில் உள்ள நில நிர்வாக ஆணையரை சந்தித்து, நிலத்தை பள்ளி கட்டடம் கட்டும் வகையில்,கேளம்பாக்கம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி அமைப்பதற்காக, பள்ளி கல்வித்துறைக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து உத்தரவிடும்படி மனு அளித்தனர்.
மனுவை பெற்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இழுபறியில் இருந்து வருகிறது.
எனவே, மாணவியர் நலன் கருதி விரைவில், பள்ளிக்கல்வித் துறை பெயருக்கு நில மாற்றம் செய்து, பள்ளி கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என, பெற்றோர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
விஜயின் இன்றைய கடலுார் பயணம் திடீர் ரத்து
-
தோல்வி பயத்தால் அண்ணாமலை போட்டியிடவில்லை
-
சிக்கிய 200 கோடி ரூபாய்? நெல்லையில் அதிகாரிகள் மவுனம்
-
தே.ஜ., கூட்டணி சதி முயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: திருமாவளவன் ஆவேசம்
-
கோடிகளை கொட்டி கொடுத்து காங்கிரசை ஸ்டாலின் சார் பையில் போட்டு கொண்டார்: விஜய் விமர்சனம்
-
பொதுநலவாதிக்கு வாய்ப்பு கொடுங்கள்