காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலைய பிரச்னைக்கு.. தீர்வு வருமா?. இடத்தை அளவிட குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைவதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், பேருந்து நிலையம் அமையும் இடத்தை அளவீடு செய்ய, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, இரண்டு அதிகாரிகள், நகராட்சி நிர்வாகத் துறையால் நியமிக்கப்பட்டு உள்ளதால், தொடரும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம், நகரின் மைய பகுதியில், 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. ஒரு நாளைக்கு, 300 பேருந்துகளுக்கு மேலாக இங்கு வந்து செல்கின்றன.
இதனால், போதிய இடவசதி இல்லாததாலும், பிற மாவட்டங்களுக்கு பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தாலும், தேசிய நெடுஞ்சாலையைஒட்டி புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவை, 10 ஆண்டு களுக்கு முன் ஏற்பட்டது.
உத்தரவு இதனால், அ.தி.மு.க., ஆட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்ட கீழ்கதிர்பூரில் இடம் தேர்வானது. ஆனால், நீதிமன்ற வழக்கு மற்றும் ஆட்சி மாற்றம் காரணமாக, அந்த இடம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, இரண்டு இடங்களை ஆய்வு செய்தனர்; பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்வி அறக்கட்டளை பயன்பாட்டில் உள்ள இடத்தை, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தபோது, அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, 2024ம் ஆண்டு இறுதியில், 19 ஏக்கரை கையகப்படுத்த வேண்டிய உத்தரவுகளை, காஞ்சிபுரம் முன்னாள் கலெக்டர் கலைச்செல்வி பிறப்பித்தார்.
ஆனால், அந்த இடத்தை தனியார் கல்வி அறக்கட்டளை உரிமை கோரியது. மேலும், 2025 ஜனவரியில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இடைக்கால தடை உத்தரவு பெற்றது.
இதையடுத்து, 35 கோடி ரூபாயில் பேருந்து நிலையம் கட்ட டெண்டர் எடுத்த நிறுவனம் சார்பில், 2025 நவம்பரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கையும் சேர்த்து, கடந்த டிசம்பர் 7ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, பேருந்து நிலையம் கட்ட அனுமதி அளித்ததோடு, 19 ஏக்கரில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களையும் அகற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டது.
மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக, பொக்லைன் இயந்திரங்களை இறக்கி, அந்த இடத்தை சுத்தம் செய்து வந்தது. பேருந்து நிலையத்தை, 10 ஏக்கரில் கட்ட அடுத்தகட்ட ஏற்பாடுகள் நடந்தன. பூமி பூஜை போட ஏற்பாடுகளும் நடந்தன.
ஆனால், தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி மாதம் வழக்கு தொடர்ந்தது. இவ் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட இடத்தில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என, நீதி மன்றம் உத்தரவிட்டது.
இரண்டு வாரங்களில் பதில் அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என்பதால், பாலிடெக்னிக் உள்ள பகுதியில், எந்தவித செயல்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகத்தால் செய்ய முடியாத நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
மே, 12ல் விசாரணை இதனால், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர், புதுடில்லிக்கு அவ்வப்போது சென்று வழக்கில் வெற்றி பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில், சமீபத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பேருந்து நிலையம் அமையும் அந்த 19 ஏக்கர் இடத்தை பாலிடெக்னிக் தரப்பிலும், மாநகராட்சி தரப்பிலும் சர்வே செய்து, அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே, 12ல் நடைபெறும் அடுத்த விசாரணைக்கு இந்த அறிக்கையை தரவும் உத்தரவிட்டுள்ளது.
நில அளவீட்டுக்காக, போக்குவரத்து குழுமமான 'கும்டா' உறுப்பினர் செயலர் ஐ.ஜெயகுமார், நகராட்சி நிர்வாகத்துறை திட்டங்களுக்கான துறை இயக்குநர் வி. விமலா ஆகியோரை, நகராட்சி நிர்வாகத்துறை நியமித்து உள்ளது.
இதுகுறித்து, நகரமைப்பு வல்லுநர்கள் கூறியதாவது:
காஞ்சிபுரம் பேருந்து நிலைய விவகாரத்தில், நகர்ப்புற திட்டமிடல் ரீதியில் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர் ஒருவரை நியமித்து இருக்க வேண்டும்.
ஆனால், கும்டாவில் உறுப்பினர் செயலராக உள்ள ஓய்வுபெற்ற இந்திய ரயில்வே பணிகள் பிரிவு அதிகாரியை, வல்லுநராக நகராட்சி நிர்வாகத்துறை நியமித்துள்ளது.
இது, எந்த விதத்தில் பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
@block_B@ அளவீடு அறிக்கை மே 12ல் சமர்ப்பிப்பு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பேருந்து நிலையம் அமையும் இடத்தை சர்வே செய்ய உள்ளோம். இதற்காக, எங்கள் தரப்பில், சென்னை பெருநகர போக்கு வரத்து திட்டத்தின் உறுப்பினர் செயலர் ஜெயக்குமார் உட்பட இருவர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பாலிடெக்னிக் தரப்பில் இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. அவர்கள் தரப்பிலும் யாராவது நியமிக்கப்பட்டு, நிலத்தை சர்வே செய்ய வேண்டும். பாலிடெக்னிக் கட்டடம் பாதிக்காதவாறு பேருந்து நிலையம் அமைக்க முடியுமா என, உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. நிலம் சர்வே செய்து, மே 12ல் நடக்கும் விசாரணையின்போது அறிக்கை தாக்கல் செய்யப்படும். - பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர், காஞ்சிபுரம்.block_B
மேலும்
-
விஜயின் இன்றைய கடலுார் பயணம் திடீர் ரத்து
-
தோல்வி பயத்தால் அண்ணாமலை போட்டியிடவில்லை
-
சிக்கிய 200 கோடி ரூபாய்? நெல்லையில் அதிகாரிகள் மவுனம்
-
தே.ஜ., கூட்டணி சதி முயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: திருமாவளவன் ஆவேசம்
-
கோடிகளை கொட்டி கொடுத்து காங்கிரசை ஸ்டாலின் சார் பையில் போட்டு கொண்டார்: விஜய் விமர்சனம்
-
பொதுநலவாதிக்கு வாய்ப்பு கொடுங்கள்