வீரமணியை கண்டு அலறும் தி.மு.க., வேட்பாளர்கள்

'தி.க., தலைவர் வீரமணி, எங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வர வேண்டாம்' என, தி.மு.க., வேட்பாளர்கள், கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து, தி.மு.க.,வின் தொகுதி பார்வையாளர்கள் சிலர் கூறியதாவது:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, 'தேர்தல் பிரசாரம் செய்வேன்' என, தி.மு.க., தலைமையிடம் அடம் பிடித்து, பிரசாரத்துக்கு அனுமதி வாங்கி உள்ளார்.

தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று முன்தினம் ஆலங்குளம் தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடக்கினார். மொத்தம் 16 நாட்களில், 35 தொகுதிகளில் பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆண்டு முழுக்க, ஹிந்து மத துவேஷ கருத்துகளை பேசுபவர் வீரமணி. தேர்தலில் எல்லா மதத்தினரும் சேர்ந்து ஓட்டு போட்டால்தான் வெற்றி பெற முடியும்.

அந்த வகையில், ஹிந்து மதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள வீரமணி, தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதை வேட்பாளர்கள் விரும்பவில்லை. பிரசார வாகனத்தில் ஈ.வெ.ரா.,வின் படத்தை வைத்துக் கொண்டு, ஓட்டு கேட்டால், யார் போடுவர்.

அதோடு, தி.மு.க.,வுக்கு வரும் ஓட்டுகள், வீரமணியின் பிரசாரத்தால் கிடைக்காமல் போய்விடும் என, வேட்பாளர்கள் அச்சப்படுகின்றனர்.

இந்த பயம், முதல்வர் ஸ்டாலின், உதயநிதிக்கும் இருப்பதால், தங்கள் தொகுதிகளில், வீரமணியை பிரசாரம் செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால், அவர் அடம் பிடித்தார் என்பதற்காக, பிற தொகுதி வேட்பாளர்களிடம், அவரை தலைமை கோர்த்து விட்டது.

வீரமணி எங்களுக்கு பிரசாரம் செய்ய வேண்டாம் என, தலைமையிடம் வேட்பாளர்கள் வலியுறுத்தியும் பயனில்லை. 'முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யத்தான், அவரை அனுப்பி வைத்துள்ளனர். பல்லை கடித்துக் கொண்டு, கொஞ்சம் நேரம் அவருடன் நில்லுங்கள்' என, தலைமையில் இருந்து பதில் வருகிறது.

அதேநேரம், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - ம.ம.க., - எஸ்.டி.பி.ஐ., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கூட்டணிகளுக்கு பிரசாரம் செய்யும் வீரமணி, ஒரு தொகுதியில் கூட, வி.சி.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. அதேபோல் சீர்காழியை தவிர, வேறு எந்த தனித்தொகுதிகளிலும் வீரமணி பிரசாரம் செய்யவில்லை.

ஏற்கனவே, பட்டியலின சமூகத்துக்கு எதிராக வீரமணி செயல்படுகிறார் என, தி.க.,வுக்குள் சர்ச்சை ஓடுகிறது. அதை நிரூபிக்கும் விதமாக, வீரமணியின் தேர்தல் பரப்புரை அமைந்துள்ளது என, அவருடைய இயக்கத்திலும் பிரச்னைகள் வெடித்துள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement