'த.வெ.க.,வுடன் கூட்டணி வைக்கவே ராகுல் விரும்பினார்'

14

த.வெ.க., தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

புதுச்சேரி மாநிலத்தை விஜய் கண்டுகொள்ளவில்லை. அம்மாநில முதல்வர் ரங்கசாமி பெயரை உச்சரிக்காததற்கு, அவர் மீதான பாசம்தான் காரணம் என்கின்றனரே...




அப்படியெல்லாம் இல்லை. அவரின் ஆட்சியில் நடக்கும் விஷயங்களை விமர்சனம் செய்கிறார். புதுச்சேரியில் அரசியல் மாற்றம், அடிப்படை கட்டமைப்பு மாற்றம் வர வேண்டும் என, விஜய் நினைக்கிறார். புதுச்சேரி பா.ஜ., கூட்டணி எப்படி அழுத்தத்தால் உருவானது என்றும் விஜய் சொல்லி இருக்கிறார். நிச்சயம் புதுச்சேரியிலும் த.வெ.க., ஆட்சி அமைக்கும்.

'நீங்கள் இரண்டரை ஆண்டு ஆட்சி; நாங்கள் இரண்டரை ஆண்டு ஆட்சி' என, உங்களிடம் கூட்டணி பேசியது யார்?




அ.தி.மு.க., பேசியது என சொல்ல முடியும். ஆனால், தனிப்பட்ட முறையில் பேசப்பட்டது, பொதுவெளியில் பேசுவது சரியாக இருக்காது. தே.ஜ., கூட்டணியில் த.வெ.க., இணைய போகிறது என, தி.மு.க., தொடர்ச்சியாக பொய்யை கட்டமைத்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சொன்னது தான் அது.

கொள்கையில் சமரசம் செய்தால், கட்சியின் அடிப்படையே ஆட்டம் கண்டுவிடும். மதசார்பற்ற சமூக நீதி என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். கொள்கை இழந்து, கருணாநிதி போல் எங்களால் பா.ஜ., உடன் கூட்டணி வைக்க முடியாது. மாற்றம் வேண்டும் என்றுதான், த.வெ.க.,வுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கின்றனர். எனவே, எந்த காலத்திலும் எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம்.

காங்., கூட்டணி இல்லை என்றதும், பா.ஜ.,வுடன் கூட்டணி பேசினீர்களா? கரூர் வழக்கை வைத்து, பா.ஜ., ரொம்பவே அழுத்தம் கொடுத்ததா?




பா.ஜ.,வை கொள்கை எதிரி என விஜய் அறிவித்துள்ளார். அப்படி இருக்கும்போது, பா.ஜ.,வுடன் நாங்கள் ஏன் கூட்டணி பேசப் போகிறோம். நாங்கள் ஒருபோதும் பா.ஜ.,வுடன் கூட்டணி பேசவில்லை.

ஆனால், கூட்டணிக்கு த.வெ.க., வர வேண்டும் என பா.ஜ., எதிர்பார்த்தது. அதனால்தான், ஜனநாயகன் படம் முடக்கப்பட்டது. எங்களுக்கு என்ன மாதிரியான அழுத்தம் கொடுக்கப்பட்டது என, மக்களுக்கு தெரியும். அழுத்தத்திற்கு எதிராக, விஜய் மிக உறுதியாக இருக்கிறார்.

தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி கைகூடாமல் போனதற்கு என்ன காரணம்; ராகுலுடன் விஜய் பேசினாரா?




கூட்டணி இயல்பாக, மக்களின் நலனுக்காக அமைய வேண்டும். அப்படி தான், எங்களுடன் நட்புறவில் இருந்த பிரவீன் சக்கரவர்த்தி, விஜயை சந்தித்து பேசினார். ராகுலும் எங்களுடன் பேசினார். த.வெ.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது தான், ராகுலின் விருப்பமாக இருந்தது.

தமிழகத்தில் காங்கிரசை ஆட்சியில் ஏற்ற வேண்டும் என்பது, அவர்களின் விருப்பம். ஆனால், செல்வப்பெருந்தகை மீது பல்வேறு வழக்குகள் இருந்ததாலும், வியாபார ரீதியில் ஒன்றாக இருந்ததாலும், அவரை தி.மு.க., சரிசெய்து விட்டது. அவர் தலைமையில், ப.சிதம்பரம் போன்ற வயதானவர்கள் அணி டில்லி போய், தி.மு.க.,வுடன் இருக்க வேண்டும் என்றனர்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும் என சிதம்பரம் நினைக்கிறார். தி.மு.க., சூழ்ச்சியில் வயதான காங்., நிர்வாகிகள் மாட்டிக் கொண்டனர். காங்., உடன் கூட்டணி சேரவில்லை என்றாலும், அந்த ஓட்டுகள் த.வெ.க.,வுக்கு வந்து விடும்.

தி.மு.க., முப்பெரும் விழா நடத்தியதற்கு பதிலடியாக, உடனே கரூர் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதா?




இல்லை. ஒரு தலைவரின் நிகழ்ச்சி என்பது, அனுமதிக்கு ஏற்ப மாறிக்கொண்டே தான் இருக்கும். அப்படிதான் கரூர் நிகழ்ச்சியின் தேதியில் மாற்றம் வந்தது. அதற்கு முன், கோவையில் அனுமதி கேட்டிருந்தோம்; அது கிடைக்கவில்லை. கரூரில் அனுமதி கிடைத்ததால், அங்கு சென்றோம்.

கரூர் விவகாரத்தில், செந்தில் பாலாஜிக்கு தொடர்பு உள்ளது என, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் கூறி உள்ளீர்களா?




உதயநிதியின் அரசியலுக்காக, செந்தில் பாலாஜி, மகேஷ் வழியே நடத்தப்பட்ட திட்டமிட்ட சதிச்செயல் தான் கரூர் சம்பவம். சின்னதாக கலவரம் செய்ய நினைத்தனர். ஆனால், அது அவர்களுக்கு பின்விளைவை ஏற்படுத்தி விட்டது.

கரூர் விவகாரத்தில், த.வெ.க.,வுக்கு முதலில் பழனிசாமி நேசக்கரம் நீட்டினார். பின்னர் ஏன் உங்களை தாக்கி பேசினார்?




கரூர் விவகாரத்தில் என்ன நடந்தது என, முதலில் உண்மையை பேசினார் பழனிசாமி. பின், தி.மு.க., எங்களுக்கு கொடுக்கும் அழுத்தத்தால், அ.தி.மு.க., கூட்டணிக்கு த.வெ.க., வந்துவிடும் என, பழனிசாமி கற்பனையிலேயே இருந்திருக்கிறார்.

ஆனால், எந்த பேச்சும் நாங்கள் நடத்தவில்லை. எனவே, பழனிசாமி அவரை சுற்றி இருப்போருக்கு பதில் சொல்ல வேண்டியதாயிற்று. அதனால், த.வெ.க.,வை விமர்சிக்கிறார்.

கரூர் சி.பி.ஐ., விசாரணைக்கு பின், பா.ஜ.,வை விமர்சிப்பதை த.வெ.க., தவிர்த்துவிட்டது என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?




பா.ஜ.,வை சும்மா பெயருக்கு எதிர்க்கும் தி.மு.க., எப்போதாவது எங்கள் எதிரி பா.ஜ., என சொல்லி இருக்கிறதா? இல்லவே இல்லை. ஆனால், பா.ஜ., தான் எங்கள் கொள்கை எதிரி என பிரகடனப்படுத்தி விட்டுதான், விஜய் அரசியலுக்கே வந்தார். பா.ஜ.,வை எங்கெல்லாம் எதிர்க்க வேண்டுமோ, அங்கெல்லாம் மிக தீவிரமாக எதிர்க்கிறோம்.

தேர்தலை சந்திக்க தேவையான எந்த கட்டமைப்பும் உங்கள் கட்சியில் இல்லை என்று சொல்லப்படுகிறதே...




அப்படியெல்லாம் இல்லை. 234 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை போட்டு, தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறோம். தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு இணையாக பூத் கமிட்டிகள் அமைத்துள்ளோம். ஒவ்வொரு வேட்பாளருக்கு பின்னாலும், ஒரு பைசா வாங்காமல், தொண்டர்களும் நிர்வாகிகளும் அணிதிரண்டு வீடு வீடாக பிரசாரம் செய்கின்றனர்.

கட்சி நிர்வாகிகளாலேயே விஜயை சந்திக்க முடியாத போது, சாதாரண மக்களால் எப்படி சந்திக்க முடியும்?




நடிகனுக்கு என்ன தெரியும் என எம்.ஜி.ஆர்., மீது என்னவெல்லாம் குற்றச்சாட்டு வைத்தனரோ, அதே பழைய உருட்டுகளை தான் விஜய் மீதும் வைக்கின்றனர். அவரை சந்திக்க முடியவில்லை என, இதுவரை ஒரு நிர்வாகியாவது சொல்லி இருப்பாரா; இந்த கட்டுக் கதைகளுக்கு பின்னால் தி.மு.க.,வின் கைவரிசை உள்ளது.

அ.தி.மு.க.,வில் இருந்து முக்கிய நிர்வாகிகள், த.வெ.க.,வில் இணைய முன்வந்தபோது, விஜயை தொடர்புகொள்ள முடியவில்லை. அதை, நீங்கள் மற்றும் நிர்வாகிகள் தடுத்ததாக கூறப்படுகிறதே?




அப்படியெல்லாம் இல்லை. கட்சியில் யாரை சேர்க்க வேண்டும் என்பது தலைவரின் முடிவு. அதில் யாருமே தலையிட முடியாது.

த.வெ.க., தலைவர் விஜய், இன்னும் சினிமா நடிகராகவே நடந்துகொள்கிறார் என விமர்சனம் எழுகிறதே...




சினிமாவில் 'நம்பர் ஒன்' இடத்தை துாக்கி போட்டு விட்டுதான் அரசியலுக்கு விஜய் வந்துள்ளார். ஸ்டாலின் அரசியல்வாதியாக மாறி, நாட்டை முன்னேற்றி கிழித்து விட்டாரா? அரசியலில் நல்லது செய்ய வந்தால், விமர்சனம் அதிகமாக வரும். விஜய் நிர்வாகத்துக்கு வந்தபின், எவ்வளவு உண்மையாக இருக்கிறார் என்பது மக்களுக்கு தெரியும். ஸ்டாலின் ஆட்சியில், குடும்பத்தின் தலையீடுதானே அதிகமாக இருக்கிறது.

மகன், மருமகன் செய்யும் ஊழலையே ஸ்டாலினால் தடுக்க முடியவில்லை. முதல்வர் மருமகன் என்ற பெயரில், தலைமை செயலர், கமிஷனர் உட்பட உயர் அதிகாரிகளிடம் சபரீசன் ஆலோசனை செய்கிறார். அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஸ்டாலினால் நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியவில்லை. ஸ்டாலின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர்.

தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்று எனக் கூறிவிட்டு, அவர்களை பின்பற்றி இலவசங்களை அறிவித்துள்ளீர்களே...




எளிய மக்கள், பொருளாதார வலிமை அடைவதற்கான திட்டங்களையே விஜய் அறிவிக்கிறார். இதை, இலவசங்கள் என்று சொல்லுவதே தவறு.

லோக்சபா தேர்தலில் தனித்து நின்று, 1 கோடி ஓட்டு வாங்கிய அ.தி.மு.க.,வை, தேர்தல் களத்தில் இல்லை என்று சொல்வது வேடிக்கையாக இல்லையா?




'நீட்' தேர்வு உள்ளிட்ட தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை, பா.ஜ., அரசு கொண்டு வருகிறது. வட மாநிலங்களை மையமாக வைத்தே, அரசியல் முடிவுகளை எடுக்கின்றனர். 1920ல் இருந்து, ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் களத்தை கொண்டது தான் தமிழகம். ஆனால், ஸ்டாலினும், பழனிசாமியும் டில்லியின் அழுத்தத்திற்கு தலையாட்டும் ஆட்கள்.

பழனிசாமி முதல்வராக இருந்தபோது தான், தமிழகத்துக்கு எதிரான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 2024 லோக்சபா தேர்தலுக்கு பின், பா.ஜ., அழுத்தத்திற்கு பழனிசாமி பணிந்துவிட்டார். அதனால், அ.தி.மு.க.,வை மக்கள் புறக்கணித்து விட்டனர். அமைச்சர்களின் ஊழலை காட்டி, தி.மு.க.,வையும் பா.ஜ., வளைத்து விட்டது.

இப்படியான 'வீக்' தலைவர்களை, தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதிர்காலத்தில், விஜயை வீழ்த்த, தி.மு.க., - அ.தி.மு.க., ஒன்று சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தலித், சிறுபான்மையினர் ஓட்டுகள் விஜய்க்கு வரும் என்று நம்புகிறீர்களா?




தி.மு.க., - பா.ஜ., செய்யும் ஜாதிய, மதவாத அரசியலை த.வெ.க., விரும்பவில்லை. விஜய், ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டவர். ஜாதி, மதத்தை கடந்து, எல்லாரும் த.வெ.க.,வின் குடைக்குள் ஒன்று கூடுகின்றனர். வேறுபாடற்ற தமிழக மக்கள், விஜயை வெல்ல வைப்பர்.

நீங்கள் வில்லிவாக்கம் தொகுதியை தேர்வு செய்தது ஏன்?




வில்லிவாக்கத்தில் தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும்தான் அதிக முறை வென்றிருக்கின்றன. ஆனால், பக்கத்து தொகுதியான அண்ணா நகர், தி.நகர் அடைந்த வளர்ச்சியில், கால் பங்கு கூட வில்லிவாக்கம் அடையவில்லை. ஒரு கல்லுாரி கூட இல்லை.

பள்ளிகள், மருத்துவமனை கட்டமைப்பு இல்லை. சாதாரண சாக்கடை பிரச்னை, பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. வறுமையின் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய, ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு, தி.மு.க., எப்போதும் எதுவுமே செய்யாது. அதற்கு வில்லிவாக்கம்தான் உதாரணம்.

வறுமை எங்கு அதிகமாக இருக்கிறதோ, அங்கு வென்று, அதை மாற்ற வேண்டும் என, விஜய் கூறுவார். அதனால் வில்லிவாக்கத்தை தேர்வு செய்தேன்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில், கிறிஸ்துவ மக்கள் அதிகம் உள்ளதால்தான், அந்த தொகுதிகளை விஜய் தேர்வு செய்தாரா?




எதிர்க்கட்சிகளின் மலிவான அரசியல் இது. த.வெ.க., ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட இயக்கம். தி.மு.க., ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டது வட சென்னை தான்.

எனவே, முதலில் வறுமையிலிருந்து மீட்க வேண்டும் என, வட சென்னை வளர்ச்சிக்காக, ஒரு தொகுதியை தேர்வு செய்யும்போது, பெரம்பூர் கிடைத்தது. அதை அவர் தான் தேர்வு செய்தார்.

அதேபோல், திருச்சியை தலைநகரமாக மாற்ற, எம்.ஜி.ஆர்., ஆசைப்பட்டார். அந்த வழியில், எல்லா நகரங்களையும் சமமாக பாவித்து, நிர்வாகத்தை செய்வேன் என விஜய் உறுதியாக உள்ளார். அந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவே, தமிழகத்தின் மைய தொகுதியான திருச்சி கிழக்கிலும் அவர் நிற்கிறார்.

அதேபோல், தேர்தல் அரசியலில், திருச்சியில் அவர் நிற்கும்போது, அதன் தாக்கம் த.வெ.க.,வுக்கு பயன் தரும். எனவேதான், இரண்டு தொகுதிகளில் விஜய் நிற்கிறார். இரண்டிலும் வெற்றி பெறுவார்.

நீங்கள் பல சர்வே எடுத்துள்ளீர்கள்; தேர்தல் களம் எப்படி உள்ளது?




எந்த கட்சிக்கும் இல்லாத அளவுக்கு, த.வெ.க.,வுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. விஜயை காண, தன்னெழுச்சியாக மக்கள் கூடி, திருவிழா போல் கொண்டாடுகின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., ஆண்டது போதும் என, அவர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

கூட்டணி கட்சிகளை, அடிமைபோல் தி.மு.க., நடத்துகிறது. அதனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க., - ம.தி.மு.க.,வில் உள்ள உணர்வுமிக்க தொண்டர்கள், த.வெ.க., பக்கம் வந்துவிட்டனர்.

அ.தி.மு.க., தலைமைக்கு நிர்வாக திறனில்லை. அதனால், தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்து, கட்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. அ.தி.மு.க., தொண்டர்களும், விஜய்க்கு ஆதரவாக நிற்கின்றனர்.

அனைத்து தொகுதிகளிலும் விஜய் அலை வீசுகிறது. தேர்தல் நெருக்கத்தில், விஜயின் பரப்புரை அரசியல் சுனாமியாக மாறும். பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement