கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம்... சூடு பிடித்தது!வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் உற்சாகம்
திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்பு மனு பரிசீலனையைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடு தற்போது பிடித்துள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை தொகுதிகளில் வேட்புமனு தாக்கல், வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம் என தேர்தல் சம்பர்தாய நிகழ்வுகளை நிறைவு செய்திருக்கும் தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள், கட்சி தலைவர்களின் வருகையை தொடர்ந்து அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
அ.தி.மு.க., தரப்பில் அதன் பொதுச்செயலாளர் பழனிசாமி உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதேபோல் நேற்று தி.மு.க., சார்பில் திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில் கிராமங்களுக்கு வேட்பாளர்கள் நேரடியாக களமிறங்கி வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் இறங்கியுள்ளனர். தி.மு.க., வேட்பாளர்களான வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், வசந்தவேல், கூட்டணி கட்சியான வி.சி., வேட்பாளர் மாலதி ஆகியோர் அரசின் கடந்த கால நலத்திட்டங்களை கூறியும், தொகுதியில் தி.மு.க., அரசு செயல்படுத்தி இருக்கும் திட்டங்களையும், தொகுதியில் மேற்கொண்டு இருக்கும் வளர்ச்சி பணி திட்டங்களை எடுத்துச் சொல்லி ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
அ.தி.மு.க., வேட்பாளர்களான குமரகுரு, ராஜிவ்காந்தி, ராகேஷ், கூட்டணி கட்சியான பா.ம.க., வேட்பாளர் செழியன் ஆகியோர் கடந்த கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்தும், அதனை தி.மு.க., அரசு முடக்கிவிட்டதை எடுத்துக் கூறியும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வெற்றி பெற்றவுடன் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வங்கிக் கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்பதை முன்னிறுத்தியும் மக்களை சந்தித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் களம் காணும் வி.சி., வேட்பாளர் மாலதியை ஆதரித்து தி.மு.க., மாவட்டச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் களமிறங்கி தேர்தல் பணி செய்து வருகின்றனர். அதேபோல் அ.தி.மு.க., கூட்டணியில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் செழியனை ஆதரித்து அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுருவும், அதன் நிர்வாகிகளும் செயல்பட துவங்கியுள்ளனர்.
அ.தி.மு.க., தி.மு.க., தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், அரசியல் களத்திற்கு புதிய வரவாக வந்துள்ள த.வெ.க., வேட்பாளர்கள் நான்கு தொகுதியிலும் பொதுமக்களுக்கு அறிமுகமில்லாத நிர்வாகிகளை இணைத்து வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு கட்சித் தலைவர் மட்டுமின்றி, இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட பிரச்சாரத்திற்கு வரவில்லை என்பது பெரும் பின்னடைவாக உள்ளது.
அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நான்கு தொகுதியிலும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரத்தை முடித்து சென்றார். இது அக்கட்சியினருக்கு சற்று ஆறுதலான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு, திராவிட கட்சிகளுக்கு இணையாக களம் இறங்க போதிய பணபலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திராவிட கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி களமாடி வரும் நிலையில், த.வெ.க., நாம் தமிழர் கட்சிகள் அமைதியாக வாக்காளர்களை சந்தித்து வருவது எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பது தேர்தலுக்கு பின்பு தெரிய வரும்.
மேலும்
-
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா