சேலத்தில் ஆவின் தயிருக்கு தட்டுப்பாடு



சேலம், சேலம் மாவட்டத்தில் உள்ள, 600 முகவர்கள் மற்றும் பாலகங்கள் மூலம் ஆவின் பால், தயிர், மோர் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. தினமும், 5,000 லிட்டர் தயிர் வினியோகிக்கப்படுகிறது.

அது அரை, ஒரு லிட்டர் பாக்கெட், 100, 200 மில்லி கப்புகளில் விற்கப்படுகிறது. ஆனால் நேற்று சேலம் மாநகரில் செவ்வாய்ப்பேட்டை, அஸ்தம்பட்டி, டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயிர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.
கோடைகாலத்தில் மக்களிடம் தேவை அதிகம் உள்ள நிலையில், தயிர் வினியோகத்தில் நடக்கும் குளறுபடி, முகவர்களை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.

இதுகுறித்து சேலம் ஆவின் விற்பனை மேலாளர் கவுதம் கூறுகையில், ''உற்பத்தியில் ஏற்பட்ட சிறு சிக்கலால், ஒருநாள் மட்டும், 20 சதவீத தயிர் வினியோகம் தடைபட்டது. அவை சரி செய்யப்பட்ட நிலையில், இனி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement