தபால் ஓட்டு சேகரிக்கும் பணி தொடக்கம்

சேலம்: சேலம் மாவட்டத்தில், தபால் ஓட்டளிக்க விண்ணப்பித்தோரிடம், தபால் ஓட்டுக்கள் சேகரிக்கும் பணி ஏப்ரல் 12 ல் தொடங்குகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்., 23ல் நடக்க உள்ளது. ஆனால், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்து, கடந்த வாரங்களில் படிவங்கள் வழங்கப்பட்டன. இதில், சேலம் மாவட்டத்தில், 10,000க்கும் மேற்பட்டோர் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்து, படிவங்கள் வழங்கியுள்ளனர்.

அவர்களிடம் தபால் ஓட்டு சேகரிப்பு பணி இன்று தொடங்குகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று ஓட்டுகள் பெறப்பட உள்ளன. இப்பணிக்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுக்களில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், நுண் பார்வையாளர், வீடியோகிராபர், ஆயுதம் தாங்கிய காவலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வாக்காளர்கள் ரகசியமாக ஓட்டுப்போட தேவையான மறைவு உபகரணங்கள் எடுத்து செல்லப்படுவதோடு, ஓட்டுப்பதிவை முழு வீடியோ பதிவும் செய்யப்பட உள்ளது. வேட்பாளர்களின் முகவர்களும் உடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தபால் ஓட்டு செலுத்த, முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்ட நாளில், வாக்காளர் வீட்டில் இல்லாவிட்டால், மீண்டும் ஒருமுறை ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்படும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏப்., 14 அல்லது, 15க்குள், இப்பணிகளை முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement