வடக்கு, மேற்கில் பா.ம.க., போட்டி ஒதுங்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள்



சேலம், தமிழகத்தில் தொகுதி சீரமைப்பின்போது, சேலம் வடக்கு தொகுதி உருவாக்கப்பட்ட பின், 2016, 2021 தேர்தல்களில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே நேரடி போட்டி நிலவியது. இரண்டிலும், தி.மு.க., வெற்றி பெற்றாலும், மிகக்குறைந்த ஓட்டுகள் வித்தியாசமே இருந்தது. இருப்பினும் தற்போதைய தேர்தலில், பா.ம.க.,வுக்கு இத்தொகுதியை, அ.தி.மு.க., ஒதுக்கிவிட்டது. அதன் வேட்பாளராக, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் களம் இறக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் மாநகரில் அடங்கியுள்ள, சேலம் மேற்கு தொகுதியும், பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டு, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி போட்டியிடுகிறார். இதனால் மாநகரில் மீதி உள்ள, சேலம் தெற்கில் மட்டும், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. அக்கட்சியின் சேலம் புறநகர் மாவட்ட கைத்தறி பிரிவு செயலர் வினோத் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க., மாநகர முன்னாள் செயலர் வெங்கடாஜலம், மேட்டூரில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவான, சேலம் மாநகர கட்சி நிர்வாகிகள், தேர்தல் பணிக்கு மேட்டூர் சென்றுவிட்டனர். மற்ற நிர்வாகிகள், சேலம் தெற்கில் கவனம் செலுத்துகின்றனர். இதனால் வடக்கு, மேற்கு தொகுதிகளில், அ.தி.மு.க.,வினரின் பங்களிப்பு மிகக்குறைவாக உள்ளது. மீதி உள்ள மற்ற நிர்வாகிகளும் கூட, சாக்கு போக்கு சொல்லி ஒதுங்கி வருகின்றனர். இதனால் சேலம் வடக்கு, மேற்கு தொகுதிகளில், தேர்தல் பிரசார பணியில், பா.ம.க.,வுக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது. சொற்ப எண்ணிக்கையிலான, பா.ம.க., நிர்வாகிகளே தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

Advertisement