இடைப்பாடி தி.மு.க., வேட்பாளர் மனு ஏற்பு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., போராட்டம்்
இடைப்பாடி,இடைப்பாடி தொகுதி, தி.மு.க., வேட்பாளர் காசி மனுவில் குளறுபடி இருப்பதாக புகார் கொடுத்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட மனு நேற்று ஏற்கப்பட்டது. இதை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில் ஜலகண்டபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் காசி போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி அமுதா மனு தாக்கல் செய்தார். ஆனால் காசி, 'அபிடவிட்'டில், அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் அமுதாவும், அமுதா மனுவில், அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் காசியும் கையெழுத்திட்டிருந்தனர்.
இதனால் காசி, அமுதா மனுக்களை தள்ளுபடி செய்யக்கோரி, சுயேச்சை வேட்பாளர் ராஜா புகார் கொடுத்தார். தொடர்ந்து, அ.தி.மு.க.,வினரும் தள்ளுபடி செய்ய கோரியதால், மனு பரிசீலனை தள்ளி வைக்கப்பட்டது.
இதனிடையே, சேலம் எம்.பி., செல்வகணபதி, மனு பரிசீலனை அறையில் புகுந்து, தி.மு.க., வேட்பாளர் மனுவை தள்ளுபடி செய்யக்கூடாது என கோரிக்கை விடுத்தார். இதனால் இடைப்பாடி தாலுகா அலுவலகம் முன், அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் குவிந்ததால் பதற்றம் உருவானது. இரு கட்சியினர் இடையே மோதலை தவிர்க்க, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார், துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை, 4:25 மணிக்கு, காசியின் மனுவை ஏற்று, அமுதாவின் மனுவை தள்ளுபடி செய்து தேர்தல் அலுவலர் நடராஜன் உத்தரவிட்டார். இதற்கு அ.தி.மு.க.,வினர், சில சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் நடராஜன், காசி மனு ஏற்பு என கூறினார். இதனால், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட, போலீசார் சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து, அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் மணி, நகர செயலர் முருகன், ஒன்றிய செயலர்கள் மாதேஸ், மாதேஸ்வரன், ராஜேந்திரன் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர், தாலுகா அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை, 6:15 மணிக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டிய பின், வேறு வழியின்றி கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, இ.பி.எஸ்.,சின் ஆடிட்டர் நாச்சிமுத்து கூறியதாவது: காசி, 'அபிடவிட்' மனுவில் நிறைய தவறு இருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில், அவரது மனைவி கையெழுத்திட்டிருந்தார். அதேபோல் தேதியிலும் முரண்பாடு இருந்தது. இதுகுறித்து புகார் கொடுத்ததால், மனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. பின், எம்.பி., செல்வகணபதி, சென்னை எம்.எல்.ஏ., பரந்தாமன் வந்து, தேர்தல் அலுவலரிடம் பேசினர். சம்பந்தமே இல்லாமல், டி.ஆர்.ஓ., வந்து, ஆர்.ஓ.,விடம் பேசுகிறார். சட்டப்படி செய்ய முடியாது என்பதால், தி.மு.க.,வினர் இப்போதே அராஜகத்தை ஆரம்பித்துள்ளனர். காசி வேட்புமனு ஏற்றதை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
-
மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை