விஜய் பொம்மையுடன் பிரசாரம்; த.வெ.க., வேட்பாளர் புது உத்தி

7

த.வெ.க., தலைவர் விஜய், நல்ல காலத்திலேயே வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு ஆயிரம் முறை யோசிப்பார். இப்போது தேர்தல் காலம். ஓராயிரம் நிபந்தனைகளை விதிக்கிறது தேர்தல் ஆணையம். அதோடு வெயில் வேறு. அதனால், தலைவர் அடுத்த லோக்சபா தேர்தலுக்கு தான் வெளியில் வந்து தீவிரமாக பிரசாரம் செய்வார் என்று நினைத்தோ என்னவோ, திருச்சி திருவெறும்பூர் த.வெ.க., வேட்பாளர், புது உத்தியைக் கையாளத் தொடங்கியுள்ளார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி த.வெ.க., வேட்பாளராக நவல்பட்டு விஜி உள்ளார். அவர் நேற்று முன்தினம், வேட்புமனு தாக்கல் செய்ய பிரசார வேனில் சென்றபோது, த.வெ.க., தலைவர் விஜயின் பொம்மையுடன் சென்றார். தமிழக தேர்தல் வரலாற்றில் யாரும் செய்யாத முயற்சியாக, விஜய் பொம்மையுடன் த.வெ.க., வேட்பாளர் சென்றது, அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

இதுகுறித்து நவல்பட்டு விஜி கூறியதாவது: தி.மு.க.,வில், 40 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தேன். எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. என் உழைப்பை கேள்விப்பட்டு, முதல் முறையாக எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை, த.வெ.க., தலைவர் விஜய் வழங்கி உள்ளார். அதற்கு விசுவாசமாக இருப்பேன். தொகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது; வெற்றி பெறுவேன்.

எனக்கு வாய்ப்பளித்த தலைவர் விஜய், என்னுடன் எப்போதும் இருக்கும் உணர்வை வெளிப்படுத்தும் விதமாகத்தான், அவரது பொம்மையை தயார் செய்து, வேட்புமனு தாக்கலுக்கு பொம்மையுடன் சென்றேன். அதேபோல், பிரசாரத்துக்கு செல்லும் போதும் அவரது பொம்மையுடன் செல்வேன். மக்கள், அவரே நேரில் வந்த மாதிரிதான் உணர்வர். அதை, வேட்புமனு தாக்கலின் போதே தெரிந்து கொண்டேன். இந்த பொம்மையை என் மகன் தான் தயாரித்து கொடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க.,வில் திருவெறும்பூர் ஒன்றிய செயலராக இருந்த நவல்பட்டு விஜி, அமைச்சர் மகேஷ் தன்னை ஒதுக்கியதால், அதை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து, கட்சி பதவியை இழந்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதும், அமைச்சர் நேருவின் தீவிர விசுவாசியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement