மாவட்டத்தில் இ-பாஸ் சோதனை பணியில் தொய்வு :இரவு, அதிகாலையில் ஏராளமான வாகனங்கள் வருகை

கூடலுார்: கூடலுார் சில்வர் கிளவுட், மசினகுடி உட்பட பிற இ--பாஸ் சோதனை மையங்களில், இ-பாஸ் சோதனையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சுற்றுலா தலமான, ஊட்டிக்கு அதிகளவில் வாகனங்கள் வந்து செல்வதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி, நாள்தோாறும் எத்தனை வாகனங்கள், இப்பகுதிக்கு வந்து செல்கின்றன என்பதை கண்டறிய, 2024, மே 7ம் தேதி முதல் இ--பாஸ் நடைமுறைபடுத்தப்பட்டது. உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு கோடை சீசனில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, ஊட்டிக்கு வார நாட்களில், 6,000, வாகனங்களும் இறுதி நாட்களில், 8.000 வாகனங்கள் அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை, மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியது.

தொடர்ந்து, கேரளா, கர்நாடகாவில் இருந்து ஊட்டி உள்ள சுற்றுலா தளங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள், கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை சில்வர் கிளவுட்; தெப்பக்காடு-மசினகுடி சாலையில் மசினகுடியில் செயல்பட்டு வரும் இ--பாஸ் சோதனை மையங்களில்,'பூம் கேரியர்' வாயிலாக தானியங்கி முறையில் இ--பாஸ், மற்றும் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்து, ஊட்டிக்கு அனுப்பி வருகின்றனர்.

சமீபகாலமாக, இ-பாஸ் சோதனையில், இரவு மற்றும் அதிகாலையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், சுற்றுலா வாகனங்கள் அதிகரித்து, ஊட்டியில் தற்போதே வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்து இ-பாஸ் முறை நாள்முழுவது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன் கூறுகையில்,''இ-பாஸ் சோதனை மையங்களில் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் சோதனை செய்த பின்பு அனுமதித்து வருகின்றனர். இரவு, அதிகாலையில் நடக்கும் பணிகள் குறித்த புகார் தொடர்பாக ஆய்வு செய்து கண்காணிக்கப்படும்,'' என்றார்.

Advertisement