கொந்தகையில் நுாற்றாண்டை கடந்த பாசன கிணறு

கீழடி:கீழடி அருகே கொந்தகையில் நுாற்றாண்டை கடந்த பாசன கிணற்றை பழமை மாறாமல் பாதுகாத்து பயன்படுத்தி வருகின்றனர்.

கீழடி இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் வரலாற்றை சொல்லும் இடம், இதன் அருகிலேயே கொந்தகை கிராமத்தில் சகோதரர்கள் சந்திரசேகரன், கதிரேசன், ஆண்டிச்சாமி, சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான பாசன கிணறு இன்னமும் பழமை மாறாமல் விவசாயத்தை செழிப்பாக்கி வருகிறது. கொந்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னாண்டு இவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் கொந்தகை கண்மாய் அருகே உள்ளது. கண்மாயில் நீரில்லாத காலங்களில் விவசாயம் செய்வதற்காக நிலத்தில் ஏழு அடி விட்டமுள்ள பாசன கிணற்றை தோண்டி விவசாயம் செய்து வந்தார்.

நெல், வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயம் செய்த நிலையில் அவரது மகன்கள் தற்போது அந்த கிணற்றை பராமரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் ஏற்றம் மூலமும் அதன்பின் டீசல் இன்ஜினை பயன்படுத்தி தண்ணீர் எடுத்தவர்கள் தற்போது மின்மோட்டாரை பயன்படுத்துகின்றனர். ஏழு அடி விட்டமுள்ள கிணறை சற்று அகலமாக்கி 12 அடி விட்டமுள்ள கிணறாக மாற்றியமைத்துள்ளனர். ஏழு அடி விட்டமுள்ள கிணற்றின் கட்டுமான பணிக்கு பண்டைய கால சதுர வடிவ செங்கற்களும், அதன்பின் 12 அடி விட்டமுள்ள கிணற்றிற்கு தற்போதைய செங்கற்களையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான பாசன கிணறுகள் மறைந்து ஆழ்துளை கிணறுகளாக மாறிய நிலையில் இன்று வரை கொந்தகையில் மட்டும் பாரம்பரியம் மாறாமல் செங்கல் கட்டுமான கிணற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

சகோதரர்களில் ஒருவரான கதிரேசன் கூறுகையில்,

எங்கள் தந்தை உருவாக்கிய கிணறு, அதன்பின் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம் இதுவரை இந்த கிணறு வற்றியதே இல்லை. 60 அடி ஆழ கிணறு, 20 அடியிலேயே தண்ணீர் உள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த குழாய்கள் பதித்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வரும் நிலையில் இன்று வரை திறந்த வெளி வாய்க்கால் மூலமே பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்கிறோம், கிணற்றை நம்பி விவசாயம் செய்கிறோம், என்றார்.

Advertisement