திருப்புத்துார் அருகே ரூ 5.47 கோடி பறிமுதல்

திருப்புத்துார்:திருப்புத்துார் அருகே எஸ். எஸ்., கோட்டை சோதனைச் சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் ஷேக் அப்துல்லா, கவிதா ஆகியோர் வாகன சோதனை நடத்தி 2 வாகனங்களிலிருந்து ரூ 5.47 கோடி பறிமுதல் செய்தனர்.

திருப்புத்துார் - மதுரை ரோட்டில் எஸ். எஸ். கோட்டை சோதனைச் சாவடியில் இந்த குழுவினர் வாகனத் தணிக்கை செய்தனர். நேற்று மதியம் 3:00 மணி அளவில் மதுரைக்கு சென்ற வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் 2 வாகனங்களை தணிக்கை செய்தனர். அப்போது அதில் போதிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்வது தெரிய வந்தது.

ஒரு வாகனத்தில்

திருப்புத்துார், புதுக்கோட்டை தனியார் வங்கி கிளைகளிலிருந்து மதுரை வங்கி கருவூலத்திற்கு ரூ 4.52 கோடியும், மற்றொரு வாகனத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் திருப்புத்துார், தேவகோட்டை, ஆலங்குடி, மிளகனூர் கிளைகளிலிருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ 95 லட்சத்தையும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருப்புத்துார் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதே இடத்தில் கடந்த வாரம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட தனியார் நிறுவன பல கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Advertisement