சேத்துாரில் ஒற்றை யானையால் ஏராளமான தென்னை மரங்கள் சேதம்:-இரவு காவல் பணிக்கும் விவசாயிகள் அச்சம்

சேத்துார்:''சேத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஒற்றை யானை புகுந்து நூற்றுக்கும் அதிகமான தென்னை மரங்களை சேதப்படுத்தி வருவதால் உயிர் பயம் கருதி இரவு காவலுக்கும் ஆட்கள் வருவதில்லை,'' என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சேத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுக்கு தென்னை, மா முக்கிய சாகுபடியாக உள்ளது.

தற்போது மா மரங்கள் சீசன் என்பதால் மலையடிவாரப் பகுதிகளிலிருந்து ஆறுகள் ஓடை வழியே விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துகிறது.

சேத்துார் பிராவடி பீட் செல்லப்பிள்ளை ஊரணி முதல் தண்டாள ஓடை பகுதி வரை உள்ள சேத்துார் சுந்தர், சின்ன முனியாண்டி, ராமசாமி, செல்வி, விருதுநகர் மாரிச் செல்வம், ராஜபாளையம் அர்ஜூன ராஜா ஆகியோரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை தென்னை, மா மரங்களை சேதப்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் 100க்கும் அதிகமான தென்னை மர குருத்துகள் ஒடித்தும் 15 வளர்ந்த தென்னை மரங்களை வேரோடு சாய்த்து மா மர கிளைகளை உடைத்தும் சேதப்படுத்தி வருகிறது.

இது குறித்து தென்னை விவசாயிகள் சங்க பொருளாளர் சுந்தர்: ,''7 ஆண்டுகள் பாதுகாத்து வளர்த்த தென்னை மரங்கள் ஒரே இரவில் யானை அழித்து விடுகிறது. தற்போதைய இப்பகுதி விவசாயத்திற்கு பாதுகாப்பற்ற சூழலில் மீண்டும் செலவழித்து இவற்றை உருவாக்குவதற்கு பெரும் பொருட்செலவு ஏற்படும்.

முன்பு மா சீசன்களில் மட்டும் உலா வந்த யானைகள் தற்போது வராத நாட்களை எண்ணிவிடும் அளவுக்கு சேதம் உள்ளது. ஒவ்வொரு முறையும் வனத்துறையினரிடம் முறையிடுவதும் பிரச்சனை தொடர்ந்தும் வருகிறது. பாதுகாப்பு அச்சம் காரணமாக இரவு காவல் பணிக்கும் ஆட்கள் வருவதில்லை. தகுந்த இழப்பீடு வழங்கி மலையடிவார அகழிகளை சீரமைத்து யானையின் உள் நுழைவை கட்டுப்படுத்த வேண்டும் ,'' என்றார்.

Advertisement