கோடைகாலம் தொடங்கியதால் குடிநீருக்காக அல்லாடும் மக்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், நகர் மற்றும் கிராம பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக, மக்கள் தண்ணீருக்காக கடும் சிரமத்தை சந்திக்க தொடங்கினர்.

நிலத்தடிநீர் சேமிப்பு என்ற தொலைநோக்கு பார்வையுடன் அன்றைய மன்னராட்சியில் மாவட்டம் முழுதும் 10,000த்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய நீர்நிலைகள் கண்மாய்கள் மற்றும் அதற்கு மழைக்காலங்களில் தண்ணீர் வந்து சேர்வதற்கான வடிகால் வாய்க்கால்கள் என உருவாக்கினர்.

காலப்போக்கில் அரசியல் தலையீடுகள், அதிகாரிகள் மெத்தனம், ஆக்கிரமிப்புகளால், இவை பாழ்பட்டு போயின. 'வானம் பார்த்த பூமி புதுக்கோட்டை மாவட்டத்தில், மழைக்காலங்களில் தண்ணீர் ஓடி, கடலில் கலந்து வீணாகி வருவதை தவிர்க்க, காட்டாறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும்' என, விவசாயிகள், வலியுறுத்தியும் பலனில்லை.

தற்போது, சுட்டெரிக்கும் வெயிலையை பொருட்படுத்தாமல், கிராமப்புறங்களில் காலி குடங்களுடன் பொதுமக்கள் தண்ணீரை தேடி அலைகின்றனர். புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை. லாரிகளில் குடிநீர் வாங்கும் நிலைக்கு பாமர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருமயம் தாலுகா வடக்கு நல்லிப்பட்டி கண்மாயில் ஊற்று தண்ணீரை சேமித்து வரும் பொதுமக்கள் கூறியதாவது:

நமணசமுத்திரம், வலையம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து இங்கு தண்ணீர் எடுக்க வருகின்றனர். ஆட்சியில் யார் இருந்தாலும் கவலையில்லை. குடிநீர் பிரச்னை தீர்வு கண்டால் சரி. தினமும் 3 கி,மீ தூரம் வரை நடந்து வர வேண்டியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement