காட்சிப் பொருளாக அரசு கட்டடங்கள் வீணாகிறது: பல லட்சங்கள் செலவழித்து திறந்தும்

தேவகோட்டை,:அரசு நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் செயல்படாமல் காட்சி பொருளாக நிற்கிறது. ஆனால் கல்வி அலுவலகங்கள் சொந்த கட்டடம் இன்றி ஊழியர்கள் தவிப்பில் உள்ளனர்.

தேவகோட்டை கண்ணங்குடி ஒன்றியங்களில் 59 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில் அரசின் நிதியில் கட்டப்பட்ட 60 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது.

தேவகோட்டை ஒன்றியத்தில் காரை கிராமத்தில் மெயின் ரோடு அருகே தகவல் தொடர்பு மையம்,ரேஷன் கடை, சமுதாயக் கூடம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. ஆனால் இந்த துறை சார்பில் வேறு இடங்களில் அலுவலகம் செயல் படுகிறது.

ஓரிரு மாணவர்கள் அல்லது 10 மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் இரண்டு மூன்று கட்டடங்களில் செயல்படுகிறது. சில பள்ளிகள் போதிய வசதி இல்லாத கட்டடத்தில் செயல்படுகிறது. சத்துணவு வேறு இடத்தில் தயாரித்து கொண்டு வரப்படுகிறது. ஒன்றியங்களில் குப்பை பிரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு கட்டடங்கள் எல்லாமே செயல்படாமல் பாழடைந்து கிடக்கிறது.

கண்ணங்குடி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி அனுமந்தக்குடி.அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு அனுமந்தக்குடியில் அடிக்கல் நாட்டப்படும். கட்டடம் கட்டப்படும். எதுவும் செயல்படுவது இல்லை. அதிகாரிகள் ஆய்வு எதுவும் செய்வதில்லை.

முக்கிய மூன்று கட்டடங்கள் முட்புதர் மண்டி உள்ளே செல்ல வழியில்லாமல் காணப்படுகிறது. தனியார் வங்கி உதவியுடன் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையம், மக்களின் வாழ்வாதார சேவை மையம் கட்டடங்கள் கால் வைக்க கூட முடியாத நிலையில் உள்ளது. இக்கட்டடத்தில் ஒதுக்கப்பட்ட பணிகள் நடந்தால் மக்கள் தேவகோட்டைக்கு வரவேண்டியதில்லை. இணையத்தில் அரசு சேவையை பெறலாம். கண்ணங்குடி ஒன்றியத்தில் ஓரிரு பள்ளிகள் கிட்டத்தட்ட மாணவர்கள் இல்லாமல் மூடப்படும் நிலையில் உள்ளது. தேவகோட்டை நகரில் கால்நடை மருத்துவ மனையில் நாய் கருத்தடை மையம் கட்டி திறக்கப்படாமல் உள்ளது.

அரசியல் வாதிகள் கோரிக்கை வைத்தாலும் அதிகாரிகள் அந்த பகுதிகளை ஆய்வு செய்து கிராம மக்களின் தேவை அறிந்து கட்டடங்களை கட்ட வேண்டும். தேவகோட்டை வட்டார கல்வி அலுவலகம் குறுகலான இடத்தில் வாடகை கட்டடத்திலும், கண்ணங்குடி கல்வி அலுவலகம் ஆபத்தான கட்டடத்திலும் செயல்படுகிறது.

புதிய கட்டடம் கட்ட வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் கூறுகிறார்கள். அதிகாரிகள் புதியதாக கட்டப்படும் கட்டடங்கள் தேவை தானா என்பதை அறிந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

Advertisement